பாலையை அவ்வுலகம் பெறாதே நிற்கும் படியாகச் செய்தார் எ-று. எனவே, யானும் அவ்வாறே நூல் செய்வ லென்றார். உலகத்தைப் படைக்கின்ற
காலத்துக் காடும் மலையும் நாடுங் கடற்கரையுமாகப் படைத்து, இந்நால்வகை
நிலத்திற்கு ஆசிரியன் தான் படைத்த ஐவகை ஒழுக்கத்திற் பாலை
யொழிந்தனவற்றைப் பகுத்துக் கொடுத்தான், அப் பாலை ஏனையபோல ஒருபாற் படாது நால்வகை நிலத்திற்கும் உரியதாகப் புலனெறி
வழக்கஞ்செய்து வருதல்பற்றி. பாலைக்கு நடுவணதென்னும் பெயர்
ஆட்சியும் குணனும் காரணமாகப்பெற்ற பெயர். ‘நடுவு நிலைத்திணையே
நண்பகல் வேனில்’ (9) என ஆள்ப. புணர்தல், இருத்தல், இரங்கல்,
ஊடல் என்பவற்றிற்கு இடையே பிரிவு நிகழ்தலானும், நால்வகை யுலகத்திற்கிடையிடையே, ‘‘முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப்
பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்.’’
(சிலப். காடு. 54. 56) என முதற்பொருள்
பற்றிப் பாலை நிகழ்தலானும், நடுவணதாகிய நண்பகற் காலந் தனக்குக்
காலமாகலானும், புணர்தற்கும் இருத்தற்கும் இடையே பிரிவு வைத்தலானும், உலகியற் பொருளான அறம்பொருளின்பங்களுள் நடுவணதாய பொருட்குத் தான் காரணமாகலானும், நடுவணதெனக் குணம் காரணமாயிற்று. பாயிரத்துள் எல்லை
கூறியதன்றி ஈண்டும் எல்லை கூறினார், புறநாட்டிருந்து தமிழ்ச்செய்யுள்
செய்வார்க்கும் இதுவே இலக்கணமாமென்றற்கு. இவ்விலக்கணம், மக்கள்
நுதலிய அகனைந்திணைக்கே யாதலின் இன்பமே நிகழுந் தேவர்க்காகாது. ‘காமப் பகுதி கடவுளும் வரையார்’. (தொல். பொருள். 83) என்பது புறம். நடுவணாற்றிணை
யென்னாது ஐந்திணை யென்றார், பாலையும் அவற்றோ டொப்பச் சேறற்கு. இத்திணையை மூன்றாக மேற்பகுப்பர்.
(2) நடுவணைந்திணைப் பகுப்பு |