நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3843
Zoom In NormalZoom Out


வுங்     கூறுதலன்றி,     யாண்டும்     எஞ்ஞான்றும்     இல்லன
கூறாரென்றற்கன்றே நாடகமென்னாது வழக்கென்பா ராயிற்றென்பது.
  

இவ்வதிகாரத்து    நாடகவழக்கென்பன,    புணர்ச்சி   உலகிற்குப்
பொதுவாயினும்,   மலைசார்ந்து  நிகழுமென்றுங்,  காலம்  வரைந்தும்,
உயர்ந்தோர்   காமத்திற்  குரியன  வரைந்தும்,  மெய்ப்பாடுதோன்றப்
பிறவாறுங்     கூறுஞ்    செய்யுள்    வழக்காம்.    இக்கருத்தானே
‘முதல்கருவுரிப்பொரு ளென்ற மூன்றே - நுவலுங் காலை’ (தொல். பொ.
அகத். 3) என்று புகுந்தார் இவ்வாசிரியர்.
  

இப்    புலநெறிவழக்கினை இல்ல தினியது, புலவரா னாட்டப்பட்ட
தென்னமோவெனின், இல்லதொன்று கேட்டோர்க்கு மெய்ப்பாடு பிறந்து
இன்பஞ்செய்யா   தாகலானும்,  உடன்கூறிய  உலகியல் வழக்கத்தினை
ஒழித்தல்   வேண்டு  மாகலானும்,  அது  பொருந்தாது.  அல்லதூஉம்
அங்ஙனங்கொண்ட இறையனார் களவியலுள்ளும்,
  

‘‘வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கு முரித்தே’’
                                  (இறையனார்.37)
  

‘‘அரச ரல்லா வேனை யோர்க்கும்
புரைவ தென்ப வோரிடத் தான’’        (இறையனார்.38)

எனவும்,

‘‘வேந்தற் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவென்
றாங்கவ் விரண்டு மிழிந்தோர்க் குரிய’’   (இறையனார்.39)

எனவும்     நான்கு வருணமுங் கூறி, நால்வகைத் தலைமக்களையும்
உணர்த்தலின்   இல்லதென்பது  தொல்லாசிரியர்  தமிழ்வழக்கன்றென
மறுக்க.  இக்கருத்தானே மேலும் ‘மக்க ணுதலிய வகனைந் திணையும்’
(தொல். பொ. அகத். 54) என்பர். (53)
  

அகனைந்திணைக்கண்ணும் தலைவன் முதலியோர் இயற்பெயராற்
கூறப்பெறார் எனல்

  

54.

மக்கள் நுதலிய அகனைந் திணையுஞ்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.
 

இது  முற்கூறிய  புலநெறிவழக்கிற்குச்  சிறந்த ஐந்திணைக் காவதொரு
வரையறை கூறுகின்றது.
  

(இ-ள்.)     மக்கள்  நுதலிய  அகன்  ஐந்திணையும்-மக்களே
தலைமக்களாகக்  கருதுதற்குரிய  நடுவ ணைந்திணைக்கண்ணும்; சுட்டி
ஒருவர்   பெயர்   கொளப்பெறார்  -  திணைப்பெயராற்  கூறினன்றி
ஒருவனையும்  ஒருத்தியையும்  விதந்து  கூறி,  அவரது  இயற்பெயர்
கொள்ளப்பெறார் எ-று.
  

இது  நாடக  வழக்குப்  பற்றி விலக்கியது. அவை வெற்பன் துறைவன்
கொடிச்சி கிழத்தி யெ