நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3853
Zoom In NormalZoom Out


கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.  

நோய்  இன்று உய்த்தல் - நிரைகொண்டோர்  அங்ஙனம்  நின்று
நின்று  சிலர்  பூசன்மாற்றத்  தாங்கொண்ட  நிரையினை இன்புறுத்திக்
கொண்டு  போதலும், மீட்டோரும்  அங்ஙனம்  நின்று  நின்று  சிலர்
பூசன்மாற்றத்    தாம்  மீட்ட   நிரையினை    இன்புறுத்திக்கொண்டு
போதலும்;
  

உ-ம்:  

‘‘புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்
நெடுவரை நீழ னிரை.’’
           புற. வெ. வெட்சி.11)
  

‘‘கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான்
மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத்
தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு
மள்ளர் நடவா வகை.’’

                         
(பெரும்பொருள்விளக்கம். 
                      புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6)
  

இவை கண்டோர் கூற்று.

நுவலுழித்   தோற்றம் - பாடிவீட்டுள்ளோர்   மகிழ்ந்துரைத்தற்குக்
காரணமான   நிரைகொண்டோர்  வரவும்,   ஊரிலுள்ளோர்   கண்டு
மகிழந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்;
  

உ-ம்:  

‘‘மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு
மையணற் காளை மகிழ்துடி - கையணல்
வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட

வுய்த்தன் றுவகை யொருங்கு.’’
   (புறம். வெ. வெட்சி.12)
  

‘‘காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா
மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து
தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு
மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’

(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7)
  

இது கண்டோர் கூற்று.  

தந்து  நிரை - நிரைகொண்டோர்  தாங்கொண்ட  நிரையைத் தம்
மூர்ப்புறத்துத்   தந்து   நிறுத்தலும்,    நிரைமீட்டோர்தாம்    மீட்ட
நிரையினைத் தந்து நிறுத்தலும்;
  

உ-ம்:  

‘‘குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங்
களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி
நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான
மெல்லாம் பெறுக விடம்.’’
  

‘‘கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத்
தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற்
போமே யிவையிவற்றைப் போற்றுமின் புல்லொடுநீர்
தாமேய் புலம்போலத் தந்து.’’
 
 

இவை கண்டோர் கூற்று.  

பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற்
பாதீடாயிற்று;    வேந்தனேவலாற்     றாங்கொண்ட     நிரையைப்
பகுத்துக்கோடலும்,  மீட்டோருந்  தத்தநிரையைப்  பகுத்துக்கோடலும்,
நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக் கொடுத்தலும்;
  

உ-ம்: