நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3946
Zoom In NormalZoom Out


நிலை வாழ்த்து.

‘‘சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்குஞ்
சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ
வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த
தூய்மையதா மைதீர் சுடர்’’

இது கந்தழி வாழ்த்து.

‘‘பிறைகாணுங் காலைத்தன் பேருருவ மெல்லாங்
குறைகாணா தியாங்கண்டு கொண்டு - மறைகாணா
தேய்ந்து வளர்ந்து பிறந்திறந்து செல்லுமென்
றாய்ந்தது நன்மாயை யாம்’’

இது வள்ளி வாழ்த்து.

‘‘தனிக்கணிற் பாகமுந் தானாளு மாமை
பனிக்கண்ணி சாவு படுத்துப் - பனிக்கணந்
தாமுறையா நிற்குமத் தண்மதிக்குத் தாயிலளென்
றியாமுரையா நிற்கு மிடத்து’’

இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள்வாழ்த்து.         (33)

எய்தாதது எய்துவித்தல்

89. கொற்ற வள்ளை யோரிடத் தான.

இஃது  எய்தாதது  எய்துவித்தது; தேவர்க்கும் உரியவாம் ஒரு சார்
அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின்.

(இ-ள்) கொற்றவள்ளை - அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய்
வெட்சி  முதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை; ஓரிடத்தான
-மேற்கூறி  நின்ற  தேவர் பகுதிக்கண்ணதன்றி  அவரின்  வேறாகிய
மக்கட் பகுதிக்கண்ணது எ-று.

எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்கிளைஞருங்
கூளிச்சுற்றமும் ஒன்றனை நச்சிப் புகழாதே வாளா கூறுதலும், ஈண்டுக்
கூறுகின்ற  கொற்றவள்ளை  புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய
ஏழனானும்   புகழ்ந்துரைத்தலுமாயிற்   றாதலிற்   ‘படையியங்கரவம்’
(தொல்.புறம்.3) முதலாக வஞ்சியிற் ‘குன்றாச் சிறப்பிற் கொற்றவள்ளை’
யீறாகக்   கிடந்த   பொருட்   பகுதியெல்லாம்  பாடாண்டிணையாகப்
பாடுங்கால்  மக்கட்கே  யுரிய  என்பதூஉம், உழிஞை முதலியவற்றைப்
பாடாண்டிணையாகப்  பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப
உரியவென்பதூஉங்   கூறுதலாயிற்று.  என்னை?  அரசியலாற்  போர்
குறித்து  நிரைகோடலும்  மீட்டலும்  மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க்
கேலாமையாயினும்,    அவுணரான்    முற்றப்பட்ட    துறக்கத்தினை
அகத்துழிஞை   யரணாக்கி   மனுவழித்  தோன்றிய  முசுகுந்தனோடு
இந்திரன்  காத்தாற்  போல்வனவும்  பிறவுந்  தேவர்க்குக் கூறுதலான்
அவரும்    மதில்   முற்றியவழிப்   போர்   தோன்றுதலும்   ஆண்
வென்றியெய்துதலும் உடையராதலின் பாடாண்பொருட்கும் உரியாரென
நேர்பட்டது.