நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5117
Zoom In NormalZoom Out


வேய்ந்த
வொளிமுடி பொன்மலையே யொக்கு - மொளிமுடிமேன்
மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே
லந்தரத்துக் கங்கை யனைத்து’’

என வரும்.

இதனானே யாண்டு    இத்துணைச்    சென்றதென்று    எழுதும்
நாண்மங்கலமும் பெறுதும்.

நடைமிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும்  - உலக வொழுக்கத்தை
இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்;

இங்ஙனம்     புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை?
அந்நிழல்     உலகுடனிழற்றியதாகக்     கூறுதலும்பட்டுக்     குடி
புறங்காத்தற்குக் குறியாகக் ‘குடைகொண்டே’ னென்று அக் கொற்றவன்
குறிக்கவும் படுதலின்.

மரபென்றதனாற்     செங்கோலுந்  திகிரியும்  போல்வனவற்றைப்
புனைந்துரையாக்கலுங் கொள்க.

உ-ம்:

‘‘மந்தரங் காம்பா மணிவிசும் போலையாத்
திங்க ளதற்கோர் திலதமாம் - எங்கணும்
முற்றுநீர் வைய முழுதும் நிழற்றுமே
கொற்றப் போர்க் கிள்ளி குடை’’       (முத்தொள்.35)

என வரும்.

‘‘அறநீர்மை தாங்கி யளப்பரிதாய் வானப்
புறநீர்போன் முற்றும் பொதியும் - பிறரொவ்வா
மூவேந்த ருள்ளு முதல்வேந்தன் முத்தமிழ்க்குக்
கோவேந்தன் கண்டான் குடை’’

எனவும்,

‘‘ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றா அங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ’’
         (புறம்.35)

எனவும்,

‘‘திங்களைப் போற்றுதுந் திங்களைப் போற்றுதுங்
கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கணுலகளித்த லான்’’            (சிலப். மங்கல. 1)

எனவும்,

‘‘திங்கண் மாலை வெண்குடையான் சென்னி செங்கோ
                                    லதுவோச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி’’
 
                                 (சிலப். கானல்வரி)