நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5342
Zoom In NormalZoom Out


 

குன்றத் தன்ன குவவுமண னீந்தி
வந்தனர் பெயர்வர்கொல் தாமே யல்கல்
இளையரு முதியருங் கிளையுடன் குழீஇக்
கோட்சுறா வெறிந்தெனச் சுருங்கிய நரம்பின்
முடிமுதிர் பரதவர் மடமொழிக் குறுமகள்
வலையுந் தூண்டிலும் பற்றிப் பெருங்கால்
திரையெழு பௌவ முன்னிய
கொலைவெஞ் சிறாஅர் பாற்பட்ட னளே.”       (நற்.207)

இது,  நொதுமலர்  வரைவு   மலிந்தமை  தோழி  சிறைப்புறமாகக்
கூறியது.  ‘பாற்பட்டனள்’   எனத்   தெளிவுபற்றி  இறந்த  காலத்தாற்
கூறினாள்.

“இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்
பழங்குழி யகழ்ந்த கானவன் கிழங்கினொடு
கண்ணகன் தூமணி பெறூஉ நாடன்
அறிவுகாழ்க் கொள்ளு மளவைச் செறிதொடி
எம்மில் வருகுவை நீயெனப்
பொம்ம லோதி நீவி யோனே.”              (குறுந்.379)

இது தாய் கேட்பத் தோழி தலைவிக்குக் கூறியது.

அவன்  வரைவு  மறுப்பினும்  -  தலைவி  சுற்றத்தார்  தலைவற்கு
வரைவு  மறுத்தவழியும்: தோழி அறத்தொடுநிலையாற் கூறும்.

உ-ம்:

“அலங்குமழை பொழிந்த வகன்க ணருவி
யாடுகழை யடுக்கத் திழிதரு நாடன்
பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு
முயங்காது கழிந்த நாளிவண்
மயங்கிதழ் மழைக்கண் கலுழு மன்னாய்”     (ஐங்குறு.220)

“குன்றக் குறவன் காதன் மடமகள்
அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியைப்
பெருவரை நாடன் வரையு மாயிற்
கொடுத்தனெ மாயினோ நன்றே
இன்னு மானாது நன்னுதல் துயரே”          (ஐங்குறு.258)

என வரும்.

தலைவிக்குக் கூறுவனவுங் கொள்க.

“அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்பவர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோடு
இன்றுபெரி தென்னு மாங்கண தவையே.”      (குறுந்.146)

இது தமர் வரைவு மறுப்பரோவெனக் கவன்றாட்குத் தோழி கூறியது.

“நுண்ணோர்புருவத்த கண்ணு மாடும்
மயிர்வார் முன்கை வளையுஞ் செற்றும்
களிறுகோட் பிழைத்த கதஞ்சிறந் தெழுபுலி
யெழுதரு மழையிற் குழுமும்