சி பெறானென மொழிப.
இது மதியுடம்பட்ட பின்னல்லது தலைவன் கூற்று நிகழ்த்தப் பெறானென்கிறது.
(இ-ள்.)
அன்னவகையான் உணர்ந்தபின் அல்லது - அம்மூவகை யானுந் தோழி மதியுடம்படுத்த பின்னல்லது; பின்னிலை -
இவன் ஒரு குறையுடையனென்று தோழி உய்த்துணர நிற்குமிடத்து; முயற்சிபெறான் என மொழிப - கூற்றான் அக்குறை முடித்தல்
வேண்டுமென்று முடுக்குதல் பெறானென்று கூறுப ஆசிரியர் எ-று.
தோழி தன்னை வழிபட்டவாறு கண்டு மதியுடம்பட்ட வாறுணர்ந்து கூற்றான் உணர்த்தும்.
அது “நெருநலு முன்னாள்” என்பதனுள் “ஆரஞர் வருத்தங் களையாயோ” என்றவாறு காண்க. (37)
தோழி தலைவியைக் கூட்டவும் பெறுமெனல்
129. முயற்சிக் காலத் ததற்பட நாடிப்
புணர்த்த லாற்றலும் அவள்வயி னான.
இது, தலைவன் முயற்சி கூறிய முறையே தோழி முயற்சி பிறக்குமிடங் கூறுகின்றது.
(இ-ள்.)
முயற்சிக்காலத்து - தலைவன் அங்ஙனங் கூடுதற்கு முயற்சி நிகழ்த்துங்காலத்தே; நாடி அதற்படப் புணர்த்தலும் - தலைவி கூடுதற்கு முயலுங் கருத்தினை ஆராய்ந்து அக்கூட்டத்திடத்தே உள்ளம் படும்படி கூட்டுதலும்; அவள் வயின் ஆன ஆற்றல் - தோழியிடத்து உண்டான கடைப்பிடி எ-று.
ஆற்றல் ஒன்றனை முடிவுபோக்கல். உம்மை, எச்சவும்மை. மதியுடம்படுத்தலே யன்றிக் கூட்டவும் பெறுமென்க. (38)
குறிஇவை எனல்
130. குறியெனப் படுவ திரவினும் பகலினும்
அறியத் தோன்றும் ஆற்றதென்ப.
அங்ஙனங் கூட்டுகின்றவட்குக் கூடுதற்குரிய காலமும் இடனுங் கூறுகின்றது.
(இ-ள்.) குறியெனப் படுவது - குறியென்று சொல்லப்படுவது; இரவினும் பகலினும்
- இரவின்கண்ணும் பகலின் கண்ணும்; அறியத் தோன்றும் ஆற்றது என்ப - தலைவனுந் தலைவியுந் தானும் அறியும்படி தோன்றும் நெறியையுடைய இடம் எ-று.
நெறியென்றார் அவன் வருதற்குரிய நெறி இடமென்றற்கு, அதுவென்று
ஒருமையாற் கூறினார், தலைப்பெய்வதோரிட மென்னும் பொதுமைப்பற்றி. இரவு களவிற்குச் சிறத்தலின் முற்கூறினார். அறியத் தோன்றுமென்றதனாற் சென்று காட்டல் வேண்டா; நின்று காட்டல் வேண்டுமெனக் கொள்க. (39)
|