தி னத்தம் பெயரிய
வல்லிய மடுக்கத் தொடுங்கு நல்வரைக்
கல்லக வெற்பன் மடமகள்
மெல்லியல் வனமுலைத் துயிலுற் றோயே.”
இவை அல்ல குறிப்பட்டு நிங்குகின்றான் நெஞ்சிற்குக் கூறியன. (43)
தலைவற்குத் தீயஇராசியினும் தீயநாளினும் துறந்த
ஒழுக்கமில்லையெனல்
135. மறைந்த வொழுக்கத் தோரையும் நாளும்
துறந்த வொழுக்கம் கிழவோற் கில்லை.
இது தலைவற்கு உரியதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) ஓரையும் நாளுந் துறந்த ஒழுக்கம் - தீய இராசியின் கண்ணுந் தீய நாளின்கண்ணுங் கூட்டத்தைத் துறந்த ஒழுக்கம்; கிழவோற்கு மறைந்த ஒழுக்கத்து இல்லை - தலைவற்குக் களவொழுக்கத்தின்கண் இல்லை; எனவே கற்பின்கணுண்டு எ-று.
ஒழுக்கமாவது சீலமாதலிற் சீலங்காரணத்தால் துறப்பன தீதாகிய இராசியும் நாளுமென்பது பெற்றாம். நாளாவது அவ்விராசி மண்டில முழுவதும். கிழத்தி துறந்த ஒழுக்கம் முந்நாளல்லதென (122)
முற்கூறிற்று. இதனான் அன்பு மிகுதி கூறினார். இதற்குப்
பிராயச்சித்தம் அந்தணர் முதலிய மூவர்க்கும் உண்மை ‘வந்த
குற்றம் வழிகெடவொழுகலும்’ (தொல்.பொ.146) எனக் கற்பியலிற் கூறுப. (44)
தலைவற்கு வழியருமை முதலியன இல்லையெனல்
136. ஆறின தருமையு மழிவு மச்சமும்
ஊறு முளப்பட அதனோ ரன்ன.
இதுவுந் தலைவற்கு இல்லன கூறுகின்றது.
(இ-ள்.) உளப்பட - நிலவும் இருளும் பகைவரும் போல் வனபற்றிச் செலவழுங்குதல் உளப்பட; ஆறினது அருமையும் - நெறியினது அருமை நினைந்து கூட்ட நிகழ்ந்தவழிக் கூறுதலும்; அழிவும்
- குறைந்த மனத்தனாதலும்; அச்சமும் - பாம்பும் விலங்கும் போல்வன நலியுமென்று அஞ்சுதலும்; ஊறும் - அக்கருமத்திற்கு
இடையூறு உளவாங்கொலென்று அழுங்குதலும்; அதனோர் அன்ன - கிழவற்கு இல்லை எ-று.
கிழவற்கில்லையெனவே கிழத்திக்குந் தோழிக்கும் உளவாயிற்று. அவை முற்காட்டியவற்றுட் காண்க. (45)
களவினைத் தந்தை முதலியோர் இவ்வாறுணர்வரெனல்
137. தந்தையுந் தன்னையு முன்னத்தின் உணர்ப.
இது தந்தையும் தன்னையுங் களவொழுக்கம் உணருமாறு கூறுகின்றது.
(இ-ள்.) தந்தையும் தன்னையும் ஒருவர் கூறக்கொள்ளாது உய்த்துக் கொண்டுணர்வர் எ-று.
நற்றாய் அறத்தொடு நின்ற வழியும்,
“இருவர்கண் குற்றமு மில்லையா லென்று
தெருமந்து சாய்த்தார் தலை” (கலி.39)
என்றலின், முன்னர் நிகழ்ந்த வெகுட்சி நீங்கி உய்த்துக்
கொண்டு உணர்ந்தாராயிற்று. (46)
நற்றாய் இவ்வாறு அறத்தொடு நிற்பாளெனல்
138. தாய்அறி வுறுதல் செவிலியோ டொக்கும்.
இது தந்தை தன்னையர்க்கு நற்றாய் களவொழுக்கம் உணர்த்துமாறு கூறுகின்றது.
(இ-ள்.) தாய் அறிவுறுதல் - நற்றாய் களவொழுக்கம் உண்டென்று அறிந்த அறிவு தந்தைக்குந் தன்னைக்குஞ் சென்று உறுந்தன்மை; செவிலியோடு ஒக்கும் - செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று உணர்த்திய தன்மையோடு ஒக்கும் எ-று.
என்றது, செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றாற்போல,
நற்றாயுந் தந்தைக்குந் தன்னைக்கும் அறத்தொடு நிற்கும் என்றவாறாயிற்று. அது,
“எனவாங், கறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்” (கலி.39)
என்பதனான் உணர்க.
இனி இதற்கு நற்றாயுஞ் செவிலி உணர்ந்தாற்போல் உணரு மென்று பொருள் கூறில் ‘தாய்க்கும் வரையார்’ (தொல்.பொ.116) என்னுஞ் சூத்திரம் வேண்டாவாம். (47)
களவு வெளிப்படுதற்கு நிமித்தமாவான் தலைவனெனல்
139. அம்பலு மலருங் களவுவெளிப் படுத்தலின்
அங்கதன் முதல்வன் கிழவ னாகும்.
இது களவு வெளிப்படுத்தற்கு நிமித்தமாவான் தலைமகனென்கின்றது.
(இ-ள்.) அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் - முகிழ்த்தலும் பலரறியச் சொல் நிகழ்த்தலுங் களவொழுக்கத்தினை வெளிப்படுத்தலான்; அங்கதன் முதல்வன் கிழவன் ஆகும் - அவ்விடத்து அவ்வெளிப்படை நிகழ்த்துதற்கு நிமித்தமாயினான் தலைமகனாம் எ-று.
தலைவனை அறிந்தபின் அல்லது முற்கூறிய ஐயம் நிகழாமையின் தலைவிவருத்தம் நிமித்தமாகாது. ஆண்டு ஐயம் நிகழ்தலன்றித்
துணிவு தோன்றாமையின், வரைவு நீட்டிப்போனுந், தலைவி தமர்க்குக் கூறி வெளிப்படுப்போனுந் தலைவனே என்றுணர்க. அது,
“நீரொலித் தன்ன பேஎர்
அலர்நமக் கொழிய அழப்பிரிந் தோரே” (அகம்.211)
“நெறியறி
|