நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5524
Zoom In NormalZoom Out


 

விலக்குமாறென்னையெனத் தலைவியை உயர்த்துக் கூறியவாறு காண்க.

“காலையெழுத்து” (குறுந்.45) என்பதும் அது.

“உலகம்   புரப்பான்   போல்வதோர்   மதுகையும் உடையன்”                                 (கலி.47)

எனவும்,

“தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென வஞ்சுவர் சிறுகுடி யோரே.”         (கலி.52)

எனவுந் தலைவனை உயர்த்துக் கூறியவாறு காண்க.           (46)

தலைவியும் தோழியும் வாயில்களோடு

கூறுவனவற்றை வெளிப்படக் கிளப்பரெனல்

241. வாயிற் கிளவி வெளிப்படக்கிளத்தல்
தாவின் றுரிய தத்தங் கூற்றே.

இது,  தலைவியுந்  தோழியும்  வாயிலாகச்  சென்றாருடன் கூறுவன
வற்றுட் படுவதொரு வழுவமைக்கின்றது.

(இ-ள்.)தத்தங் கூற்றே - தோழிக்குந் தலைவிக்குமுரிய கூற்றின்கண்:
வாயிற்   கிளவி   -   வாயிலாய்  வந்தார்க்கு  மறுத்துத்  தலைவனது
பழிகளைக்   கூறுங்   கிளவிகளை  ;   வெளிப்படக்   கிளத்தல்   -
மறையாது வெளியாம்படி  கூறுதல்  ;   தாவின்று  உரிய  - இங்ஙனம்
கூறுகின்றேமே என்னும் வருத்தம்  மனத்து நிகழ்தலின்றியே உரியவாம்
எ-று.

அவை   தலைவிக்குந்    தோழிக்குமுரியனவும்   காமக்கிழத்திற்கு
உரியனவும்,  தோழிக்கே   யுரியனவுந்   தலைவிக்கே   யுரியனவுமாம்.
வாயில்களாவார் ஆற்றாமையுந் தோழி முதலியோருமாம்.

“நெஞ்சத்த பிறவாக நிறையில ளிவளென
வஞ்சத்தான் வந்தீங்கு வலியலைத் தீவாயோ.”     (கலி.69)

இஃது,   ஆற்றாமை    வாயிலாகத்   தலைவன் வந்துழித் தலைவி
வெளிப்படக் கூறியது. இது தோழிக்கும் உரித்து.

“எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
யார்ப்பினும் பெரிதே.”                      (அகம்.116)

இதனுள் “நாணிலை மன்ற” எனத்  தோழி  கூறி அலராகின்றாலென
வெளிப்படக் கிளத்தலின் வழுவாயமைந்தது.

“அகலநீ துறத்தலி னழுதோவா வுண்கணெம்
புதல்வனை மெய்தீண்டப் பொருந்துத லியைபவால்
நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்துநின்
தமர்பாடுந் துணங்கையு ளரவம்வந் தெடுப்புமே.”   (கலி.70)

இது தலைவி கூற்று.

‘உரிய’   வென்றதனான்  தோழி  வாயிலாகச்  சென்றுழித் தலைவி
வெளிப்படக் கூறுதலுங் கொள்க. அஃது “இம்மை யுலகு” என்னும்  (66)
அகப்பாட்டினுட் காண்க.

இவை   இங்ஙனம் வெளிப்படக் கிளத்தலின் வழுவாய் அமைந்தன.
                                                       (47)

உள்ளுறை ஐந்துவகைப்படும் எனல்

242. உடனுறை யுவமஞ் சுட்டுநகை சிறப்பெனக்
கெடலரு ம