நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5527
Zoom In NormalZoom Out


 

மங்கல மொழியும் வைஇய மொழியும்
மாறில் ஆண்மையிற் சொல்லிய மொழியுங்
கூறியன் மருங்கிற் கொள்ளு மென்ப.

இது, மேன் மூன்றுபொருளும்  வழுவாயமைக   என்றலின் எய்தாத
தெய்துவித்தது.

(இ-ள்.)   மங்கலமொழியும்  -  தலைவற்குத்  தீங்கு வருமென்றுட்
கொண்டு தோழியுந் தலைவியும்  அதற்கஞ்சி   அவனை வழுத்துதலும்;
வைஇய மொழியும் - தலைவன்  தம்மை  வஞ்சித்தானாகத் தலைவியுந்
தோழியுங் கூறலும்; வைஇய மொழி: தீங்கைவைத்த மொழியுமாம், மாறில்
ஆண்மையிற்   சொல்லிய   மொழியும்   -  மாறுபாடில்லாத  ஆளுந்
தன்மையிடத்தே  பழிபடக்   கூறிய   மொழியும்;  கூறியன்  மருங்கிற்
கொள்ளும்  என்ப  -  வழுவமைதியாகக்  கூறிய  இலக்கணத்திடத்தே
கொள்ளுமொழி யென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

“நோயிலராக    நங்காதலர்”   (அகம்.114)  எனவுங் “தாந்தஞ்
செய்வினை முடிக்கத் தோழி” எனவுங்  கூறுவன   நம்மை அறனன்றித்
துறத்தலின்   தீங்குவருமென்றஞ்சி    வாழ்த்தியது.    நம்பொருட்டுத்
தீங்கு   வருமென நினைத்தலின் வழுவாயமைந்தது.

“வையினர் நலனுண்டார் வாராமை நினைத்தலின்”   (கலி.134)
என்பது வஞ்சித்தமை கூறிற்று.

“இதுவுமோ - ரூராண்மைக்  கொத்த  படிறுடைத்து”  (கலி.89)
என்பது ஆண்மையிலே பழியுண்டு என்றது. இதுவும் வழீஇ அமைந்தது.
                                                       (50)

சினம் முதலியன ஒருபொருளைச் சிறப்பித்துவருமாயின்

அமைக்கப்படுமெனல்

245. சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு
அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே.

இது,     மெய்ப்பாட்டியலுள் ஆகாதென்பவற்றுட் சில அமைகவென
வழுவமைக்கின்றது.    இது   பொதுவாகக்    கூறலின்   தலைவிக்குந்
தோழிக்குங் கொள்க.

(இ-ள்.)  சினனே - கோபம் நீடித்தலும்; பேதைமை - ஏழைமையும்;
நிம்பிரி    -    பொறாமை   தோன்றுங்   குறிப்பும்  ;   நல்குரவு -
செல்வமின்மையும்; அனைநால்வகையும்  - என்ற அத்தன்மையனவாகிய
நாற்கூறும்; சிறப்பொடு வருமே - ஒரு பொருளைச் சிறப்பித்துக் கூறுதல்
காரணத்தான் வரும் எ-று.

சினத்தை ஆண்டுக் கொடுமையினடக்கினார்.

“நாணு நிறையும் நயப்பில் பிறப்பிலி”