தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலோடு, அனை மரபினவே.
644 ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை
மெய்ப்படக் கிளந்த வகையது ஆகி,
ஈர் ஐங் குற்றமும் இன்றி, நேரிதின்
முப்பத்திருவகை உத்தியொடு புணரின்,
நூல்' என மொழிப, நுணங்கு மொழிப் புலவர்.
645 உரை எடுத்து அதன் முன் யாப்பினும், சூத்திரம்
புரை தப உடன்படக் காண்டிகை புணர்ப்பினும்,
விடுத்தலும் விலக்கலும் உடையோர் வகையொடு
புரை தப நாடிப் புணர்க்கவும் படுமே.
646 'மேற் கிளந்தெடுத்த யாப்பி உட் பொருளொடு
சில் வகை எழுத்தின் செய்யுட் ஆகிச்
சொல்லும் காலை உரை அகத்து அடக்கி,
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத்து ஆகித்
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி,
அளக்கல் ஆகா அரும் பொருட்டு ஆகிப்,
பல வகையானும் பயன் தெரிபு உடையது
சூத்திரத்து இயல்பு' என யாத்தனர் புலவர்.
647 பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின்
கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும்
648 விட்டு அகல்வு இன்றி விரிவொடு பொருந்திச்
சுட்டிய சூத்திரம் முடித்தல் பொருட்டா,
ஏது நடையினும் எடுத்துக்காட்டினும்,
மேவாங்கு அமைந்த மெய்ந் நெறித்து அதுவே.

|