மலைபடுகடாம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   173
Zoom In NormalZoom Out

புனிறு போகிய புனம் சூழ் குறவர்,
உயர்நிலை இதணம் ஏறிக்கை புடையூஉ,
அகன் மலை இறும்பில் துவன்றிய யானைப்
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங்கல்
இரு வெதிர் ஈர்ங் கழை தத்திக் கல்லெனக்
கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய
உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன:
வரும், விசை தவிராது; மரம் மறையாக் கழிமின்
உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி,
இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின்,
குமிழி சுழலும் கண்டு கய முடுக்கர்,
அகழ் இழிந்தன்ன, கான் யாற்று நடவை
வழூஉம் மருங்கு உடைய; வழாஅல் ஓம்பிப்
பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித்
துருவின் அன்ன புன் தலை மகாரொடு,
ஒருவிர் ஒருவிர் ஓம்பினிர் கழிமின்
அழுந்து பட்டு அலமரும் புழகு அமல் சாரல்,
விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா,
வழும்பு கண் புதைத்த நுண் நீர்ப் பாசி
அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய;