| வசை இல் புகழ், வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும், தற் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி, வான் பொய்ப்பினும், தான் பொய்யா, மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி, கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின், கவின் வாடி, நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச் சாம்பும் புலத்து ஆங்கண், காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக் குழவி, கூட்டு நிழல், துயில் வதியும் கோள் தெங்கின், குலை வாழைக் காய்க் கமுகின், கமழ் மஞ்சள், இன மாவின், இணர்ப் பெண்ணை, முதற் சேம்பின், முளை இஞ்சி அகல் நகர் வியல் முற்றத்து, சுடர் நுதல், மட நோக்கின், நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை, பொற் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும், |