| பல் கோழி, உறைக் கிணற்றுப் புறச் சேரி, மேழகத் தகரொடு சிவல் விளையாடக் கிடுகு நிரைத்து, எஃகு ஊன்றி, நடு கல்லின் அரண் போல, நெடுந் தூண்டிலில் காழ் சேர்த்திய குறுங் கூரைக் குடி நாப்பண்; நிலவு அடைந்த இருள் போல, வலை உணங்கும் மணல் முன்றில்; வீழ்த் தாழைத் தாள் தாழ்ந்த வெண் கூதாளத்துத் தண்பூங் கோதையர், சினைச் சுறவின் கோடு நட்டு, மனைச் சேர்த்திய வல் அணங்கினான், மடல் தாழை மலர் மலைந்தும்; பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும், புன் தலை இரும் பரதவர் பைந் தழை மா மகளிரொடு, பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது, உவவு மடிந்து, உண்டு ஆடியும்; புலவு மணல், பூங் கானல், மா மலை அணைந்த கொண்மூப் போலவும், தாய் முலை தழுவிய குழவி போலவும், தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் மலி ஓதத்து ஒலி கூடல், தீது நீங்கக் கடல் ஆடியும்; மாசு போகப் புனல் படிந்தும்; அலவன் ஆட்டியும்; |