| புதவின், செந் நிலை நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில், கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின், களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ன, சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி, ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின் வறை கால்யாத்தது, வயின்தொறும் பெறுகுவிர். யானை தாக்கினும், அரவு மேல் செலினும், நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும், சூல் மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை, வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிறந்த, புலிப் போத்து அன்ன, புல் அணல் காளை, செல் நாய் அன்ன கரு வில் சுற்றமொடு, கேளா மன்னர் கடி புலம் புக்கு, நாள் ஆ தந்து, நறவு நொடை தொலைச்சி, இல் அடு கள் இன் தோப்பி பருகி, மல்லல் மன்றத்து மத விடை கெண்டி, மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச், சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி, வளன் வளையூஉப் பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை முரண் தலை கழிந்த பின்றை மறிய குளகு அரை யாத்த குறுங் கால், குரம்பைச் செற்றை வாயில், செறி கழிக் கதவின், கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின், அதளோன் துஞ்சும் காப்பின் உதள, நெடுந் தாம்பு தொடுத்த குறுந் தறி முன்றில், கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும் இடு முள் வேலி எருப் படு வரைப்பின், நள் இருள் விடியல் புள் எழப் போகி புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி, |