| நறு மலர் அன்ன வளர் இளம் பிள்ளை தழீஇக் குறுங் கால் கறை அணற் குறும்பூழ், கட்சிச் சேக்கும் வன் புலம் இறந்த பின்றை மென் தோல் மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்றன்ன கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதையப் பைஞ் சாய் கொன்ற மண் படு மருப்பின் கார் ஏறு பொருத கண் அகன் செறுவின், உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில், களைஞர் தந்த கணைக் கால் நெய்தல் கள் கமழ் புதுப் பூ முனையின், முள் சினை முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் கொடுங் கால் மா மலர் கொய்து கொண்டு, அவண பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டிப் புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி ஈருடை இருந் தலை ஆரச் சூடிப் பொன் காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின், இரும்பு வடித்தன்ன மடியா மென் தோல், கருங் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் பழஞ் சோற்று அமலை முனைஇ, வரம்பில் புது வை வேய்ந்த கவி குடில் |