| நெடுங் கயம் தீப் பட மலர்ந்த கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி, உறை கால் மாறிய ஓங்கு உயர் நனந் தலை அகல் இரு வானத்துக் குறை வில் ஏய்ப்ப, அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி, முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கைக் குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் பெரு நாள் அமையத்துப் பிணையினிர் கழிமின், செழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர்ப் பைஞ் சேறு மெழுகிய படிவ நல் நகர், மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது, வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின் பெரு நல் வானத்து வடவயின் விளங்கும் சிறு மீன் புரையும் கற்பின், நறு நுதல், வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட, சுடர்க்கடைப் பறவைப் பெயர்ப் படு வத்தம், சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புறு பசுங் காய்ப் போழொடு கறி கலந்து, கஞ்சக நறு முறி அளைஇப் பைந் துணர் நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த |