| மணி மலைப் பணைத் தோள் மாநில மடந்தை அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச் செல்புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுக் கொல்கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த புதுப் பூஞ் செம்மல் சூடிப், புடை நெறித்துக் கதுப்பு விரித்தன்ன காழ் அக நுணங்கு அறல் அயில் உருப்பனைய ஆகி, ஐது நடந்து, வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப, வேனில் நின்ற வெம் பத வழி நாள் காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்பப் பாலை நின்ற பாலை நெடு வழிச் சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு, அருளி, நெய் கனிந்து இருளிய கதுப்பின்; கதுப்பு என, மணிவயின் கலாபம், பரப்பிப் பல உடன் மயில், மயிற் குளிக்கும் சாயல்; சாஅய் உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ, வயங்கு இழை உலறிய அடியின்; அடி தொடர்ந்து, ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின், சேர்ந்து உடன் செறிந்த குறங்கின், |