| உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான்; தென் புலம் காவலர் மருமான்; ஒன்னார் மண் மாறு கொண்ட, மாலை வெண் குடைக் கண் ஆர் கண்ணிக் கடுந் தேர்ச் செழியன்; தமிழ் நிலைபெற்ற, தாங்கு அரு மரபின் மகிழ் நனை, மறுகின் மதுரையும் வறிதே; அதாஅன்று, நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை, ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின், வரு முலை அன்ன வண் முகை உடைந்து, திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை, ஆசு இல் அங்கை அரக்குத் தோய்ந்தன்ன சேயிதழ் பொதிந்த செம் பொற் கொட்டை, ஏம இன் துணை தழீஇ, இறகு உளர்ந்து, காமரு தும்பி காமரம் செப்பும் தண் பணை தழீஇய தளரா இருக்கைக் குண புலம் காவலர் மருமான் |