இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1
Zoom In NormalZoom Out

மதிவெயில் விரிக்கும் கதிர்எதிர் வழங்காது
உயர்வரை புடவியின் அயர்வுற அடக்கித்
தென்புவி வடபுவி யின்சமம் ஆக்கிக்
குடங்கையில் நெடுங்கடல் அடங்கலும் வாங்கி
ஆசமித்து உயர்பொதி நேசம்உற்று இருந்த
மகத்துவம் உடைய அகத்திய மாமுனி
தன்பால் அருந்தமிழ் இன்பால் உணர்ந்த
ஆறுஇரு புலவரின் வீறுஉறு தலைமை
ஒல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி
தன்பெய ரால்உலகு இன்பஉறத் தரும்நூல்
உளம்கூர் உரையாம் இளம்பூ ரணமும்,
ஆனா இயல்பின் சேனா வரையமும்,
உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க் கினியமும்,
மற்றமற்று இடப்பொருள் முற்றும் உணர்ந்தும்
நன்னூல் முதலிய சின்னூல் தெரிந்தும்
தொல்காப் பியங்கள் பல்கால் பயின்றும்
அவைகளின் அருகிய நவையறு விதிகளும்,
வடமொழி இலக்கணக் கடல்முடிவு உடையவும்,
கற்பவர்க்கு எளிதி னில்புலப் படவே
மதியினின் மதித்துமூன்று அதிகாரம் ஆக்கிப்
புலக்கணத்து எனஉலகு இக்கணக் கொத்துஎன்று
ஒருபெயர் இட்டுத் திருவுளம் பற்றினன்
வளமையின் வளர்புகழ் அளவிய புனல்நாட்டு
ஏஅடு விழிஉமை ஆவடு துறையில்
ஆசிலா உயிர்க்குஅருள் மாசிலா மணிப்பெயர்
அம்பல வாணன்என்று உம்பரும் பரவ
வருஞான தேசிகன் இருதாள் புனையும்
அமிழ்தினும் இனிய தமிழ்வளர் நெல்லை
உவாமுதிர் மதிக்கலை சுவாமி நாதன்
தேசார் ஞானச் செல்வன்
ஈசான தேவன் எனும்தே சிகனே.
 
பாயிரவியல்

விநாயக வணக்கம்
 

1.தேக பந்தம் தீர்ந்துஅருள் பெறவே
ஏக தந்தன் இணையடி பணிவாம்.
சிவ வணக்கமும் முருகன் வணக்கமும்
 
2. கற்றைச் செஞ்சடைக் கண்மூன்று உடையனை
ஒற்றைச் செங்கதிர் வேலனை உள்குவாம்.