| காலம் இலேசம் காரகம் ஞாபகம்
விசேடணம் விசேயம் விகரம் அதிகாரம்
குணம்குணி ஆதியாம் சொற்கோள் அன்றியும்
பிறிதின் இயைபின்மை நீக்குதல் பிறிதின்
இயைபு நீக்குதல் என்னும் இலக்கணம்
முதலாப் பலவா மொழிபெயர்த் தனவும்
கொண்டனர் பண்டையோர், உண்டோ? இன்றோ?
அன்றியும் தமிழ்நூற்கு அளவுஇலை; அவற்றுள்
ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?
அன்றியும் ஐந்துஎழுத் தால்ஒரு பாடைஎன்று
அறையவே நாணுவர் அறிவுடை யோரே;
ஆகையால் யானும் அதுவே அறிக;
வடமொழி தமிழ்மொழி எனும்இரு மொழியினும்
இலக்கணம் ஒன்றே என்றே எண்ணுக;
எளிய விதிகளை யாவரும் அறிவார்
அரிய விதிகளை அறையின்அறி வார்இலை;
அதனால் அவையால் பயன்இலை; அதனால்
பயன்படு விதிசில பகர்ந்தனன் என்க;
முன்னொரு பின்மலைவு உள்ளன போல,
வருவன எல்லாம் பிறர்மதம் ஆக்குக!
கூறின பின்னும் கூறின சில; அவை
அநுவாதம் என்றே அறிந்தே அடக்குக
தமிழ்விதிக்கு அகப்படாச் சிலவிதி சாற்றினன்
அவைவட மொழிவிதி என்றே அறிக;
வேற்றுமை வினைஒழிபு எனமூன்று ஆக்கி
அவற்றினள் சொல்லினுள் சிலவிதி அடக்கி,
ஏனைநால் விதியும் இயம்பிலன் என்க
பல்கால் பழகினும் தெரியா உளவேல்
தொல்காப் பியம்திரு வள்ளுவர் கோவையார்
மூன்றினும் முழங்கும், ஆண்டினும் இலையேல்
வடமொழி வெளிபெற வழங்கும் என்க.
|