இலக்கணக் கொத்து
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   14
Zoom In NormalZoom Out

மனம்மொழி மெய்அறிவு ஆகிய நான்கன்
அசைவே ஆகியும் அவ்வசைவு இன்றியும்
நல்வினை தீவினை வெறுவினை எனநடந்து
அறிந்து செய்வினை அறியாது செய்வினை
அசேதனம் செய்வினை எனவே அமர்ந்து
தீவினை நல்வினை சிலமுறை திறம்பிச்
செய்யா வினையே செய்வினை ஆகிச்
செய்இரு வினையே செய்யா வினையாய்
இன்னும் பலவாம் இலக்கணம் பெறுமே.
 
தொழிற்பெயர், முற்று, எச்சம் பற்றி
ஒருசாரார் கருத்து.
 
82.தொழிற்பெயர் வினைமுதல் செயப்படு பொருளே
கருவி இடம்பெய ரெச்சம்முற்று ஆகலும்,
இருவகை முற்றும் ஈரெச்சம் ஆகலும்,
இருவகை எச்சமும் முற்றே ஆகலும்,
உளஎன மொழிப ஒரோவழிப் புலவர்.
 
வினைமுற்றுப் பெயர் வகைகள்
 
83.வினைமுற் றுப்பெயர் விரிக்குங் காலை,
வினைமுதல் செயப்படு பொருளே கருவி
இடமே தொழிற்பெயர் இவ்வைந்து அன்றியும்,
எட்டுஉருபு ஏற்றே எண்பொருள் ஆதல்
ஈற்றயல் திரிதல் ஈரெச்சம் ஆதல்
ஈறுஇகரம் ஆதல் அவ்ஈறுஇகரம் ஆயவை
வினைமுதல் செயப்படு பொருளொடு கருவி
இடம்வினை யெச்சமாய் இயங்குதல் அன்றியும்,
இன்னும் பலவகை எனவிளம் புவரே.
 
எச்சம் பற்றிய கருத்துக்கள்
 
84. எச்சம்என்று ஒன்றுஇல்லை இடைஅடை என்றும்,
வேறுஎச்சம் என்றுஇலை விகாரமுற்று என்றும்,
எச்சம்ஒன்று என்றும் இரண்டே என்றும்,
தன்வினை பிறவினை இவ்விரண்டு என்றும்,
முப்பொழுது அறிதலான் மூன்றே என்றும்,
தலைமைஇல் தலைமை எனஇரண்டு என்றும்,
காரணம் காரியம் எனஇரண்டு என்றும்,
முதல்வினை சினைவினை எனஇரண்டு என்றும்,
இயல்பு திரிபு இரண்டே என்றும்,
விரியே தொகையே எனஇரண்டு என்றும்,
வினையெச்சம் ஒன்றையே வெவ்வேறு என்றும்,
ஈறுசொல் பற்றி இரண்டே என்றும்,
இன்னும் பலபல இலக்கண மாகச்
சொன்னார் சிலரே துணியார் பலரே.