| நெய் விலைக் கட்டிப் பசும் பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன், கரு நாகு, பெறூஉம்
மடி வாய்க் கோவலர் குடிவயிற் சேப்பின்,
இருங் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன
பசுந் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர்.
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி,
விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை,
உறிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல்,
மேம் பால் உரைத்த ஓரி, ஓங்கு மிசைக்
கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட
பல் பூ மிடைந்த படலைக் கண்ணி,
ஒன்று அமர் உடுக்கை, கூழ ஆர் இடையன்
கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி,
அம் நுண் அவிர் புகை கமழக், கைம் முயன்று
ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச்
செந் தீத் தோட்ட கருந் துளைக் குழலின்
இன் தீம் பாலை முனையின், குமிழின்
புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின்
வில் யாழ் இசைக்கும், விரல் எறி, குறிஞ்சிப்
பல்கால் பறவை கிளை செத்து, ஓர்க்கும்
புல் ஆர் வியன் புலன் போகி முள் உடுத்து
எழு காடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்
பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்,
களிற்றுத் தாள் புரையும் திரி மரப் பந்தர்க்
குறுஞ் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி
நெடுஞ் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில்,
பருவ வானத்துப் பா மழை கடுப்பக்
கரு வை வேய்ந்த, கவின் குடிச் சீறூர்
நெடுங் குரல் பூளைப் பூவின் அன்ன,
குறுந் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப்
புகர் இணர் வேங்கை வீ கண்டன்ன,
|