| செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து,
அமளித் துஞ்சும் அழகுடை நல் இல்;
தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின், மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்.
மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து
அணங்குடை யாளி தாக்கலின், பல உடன்
கணம் சால் வேழம் கதழ்வுற்றாஅங்கு,
எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசைமின்,
வேழம் நிரைத்து, வெண் கோடு விரைஇத்
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்,
கொடுங் காற் புன்னைக் கோடு துமித்து இயற்றிய
பைங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றிப்
புலவு நுனைப் பகழியும் சிலையும் மானச்
செவ் வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்
மை இருங் குட்டத்து மகவொடு வழங்கிக்
கோடை நீடினும் குறைபடல் அறியாத்
தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின்
அவையா அரிசி அம் களித் துழவை
மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப்
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம் புற நல் அடை அளைஇத் தேம் பட
எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி,
|