பெரும்பாணாற்றுப்படை
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   32
Zoom In NormalZoom Out

வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்க்
குறுங் காற் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப்
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூக்
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்பப்
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால்
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச்
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்,
நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக் கண்,
மடவரல் மகளிரொடு பகல் விளையாடிப்
பெறற்கு அருந் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும்
பொய்யா மரபின் பூ மலி பெருந் துறைச்
செவ்வி கொள்பவரோடு அசைஇ; அவ் வயின்
அருந் திறற் கடவுள் வாழ்த்திச் சிறிது நும்
கருங் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழிமின்.
காழோர் இகழ் பதம் நோக்கிக் கீழ,
நெடுங் கை யானை நெய்ம் மிதி கவளம்
கடுஞ்சூல் மந்தி கவரும் காவில்
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின்,
திண் தேர் குழித்த குண்டு நெடுந் தெருவில்,
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க்
கடை கால்யாத்த பல் குடி கெழீஇக்
கொடையும் கோலும், வழங்குநர்த் தடுத்த
அடையா வாயில், மிளை சூழ் படப்பை,
நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்
தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றிச்
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின்,