| அம் சினை புலம்ப, வல்லோன் கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி, மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல், சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும், என்றூழ் நின்ற புன் தலை வைப்பில், பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட, மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல், வெண்கோடு நயந்த அன்பு இல் கானவர் இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் பெருங் கல் அத்தம் விலங்கிய காடே. |