| பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீள்இடை - எருவை இருஞ்சிறை இரீஇய, விரிஇணர்த் தாதுஉண் தும்பி முரல்இசை கடுப்ப, பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர உவலை சூடிய தலையர், கவலை ஆர்த்துஉடன் அரும்பொருள் வவ்வலின், யாவதும் சாத்துஇடை வழங்காச் சேண்சிமை அதர சிறியிலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய் உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வுஇன்று, புள்ளி அம்பிணை உணீஇய உள்ளி, அறுமருப்பு ஒழித்த தலைய, தோல்பொதி, மறுமருப்பு இளங்கோடு அதிரக் கூஉம் சுடர்தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து, ஆங்கு உள்ளினை வாழிய, நெஞ்சே! - போதுஎனப் புலம்கமழ் நாற்றத்து இரும்பல் கூந்தல், நல்எழில், மழைக்கண்நம் காதலி மெல்இறைப் பணைத்தோள் விளங்கும்மாண் கவினே. |