| குன்றுஓங்கு வைப்பின் நாடுமீக் கூறும் மறம்கெழு தானை அரச ருள்ளும், அறம்கடைப் பிடித்த செங்கோ லுடன், அமர் மறம்சாய்த்து எழுந்த வலன்உயர் திணிதோள், பலர்புகழ் திருவின், பசும்பூட் பாண்டியன் அணங்குடை உயர்நிலைப் பொருப்பின் கவாஅன், சினைஒண் காந்தள் நாறும் நறுநுதல், துணைஈர் ஓதி மாஅ யோள் வயின், நுண்கோல் அவிர்தொடி வண்புறம் சுற்ற முயங்கல் இயையாது ஆயினும், என்றும், வயவுஉறு நெஞ்சத்து உயவுத் துணையாக, ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும் துன்அருந் துப்பின் வென்வேற் பொறையன் அகல்இருங் கானத்துக் கொல்லி போல, தவா அலியரோ, நட்பே! அவள்வயின் அறாஅ லியரோ, தூதே - பொறாஅர் விண்பொரக் கழித்த திண்பிடி ஒள்வாள், புனிற்றுஆன் தரவின், இளையர் பெருமகன், தொகுபோர்ச் சோழன், பொருள்மலி பாக்கத்து, வழங்கல் ஆனாப் பெருந்துறை முழங்குஇரு முந்நீர்த் திரையினும் பலவே! |