அகநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   325
Zoom In NormalZoom Out


 

வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே,
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ-
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ-மகிழ்ந!-வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது-ஆங்கு எனவே?
 

என்பது  பரத்தையர்   சேரியினின்றும்  வந்த  தலைமகன்,  'யாரையும்
அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்
 

வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
முயங்கினள் வதியும்மன்னே! இனியே,
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
வல்லகொல், செல்லத் தாமே-கல்லென
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி,
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல்,
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
வைகுறு மீனின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?
 

என்பது மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார் 

நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
மராஅ யானை மதம் தப ஒற்றி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்-
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ?-ஓங்கல் வெற்ப!-
ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்,
பகல் நீ வரினும் புணர்குவை-அகல் மலை
வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
ஓம்பினள்