|
பைங் கட் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க, இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச் செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின் பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல், வெண்கோடு நயந்த அன்பு இல் கானவர் இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து, இருங் களிற்று இன நிரை, தூர்க்கும் பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
என்பது பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச்
சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப்
பூதனார்
அணங்குடை நெடு வரை உச்சியின் இழிதரும் கணம் கொள் அருவிக் கான் கெழு நாடன் மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் இது என அறியா மறுவரற் பொழுதில், 'படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக்கை நெடு வேட் பேணத் தணிகுவள் இவள்' என, முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற, களம் நன்கு இழைத்து, கண்ணி சூட்டி, வள நகர் சிலம்பப் பாடி, பலி கொடுத்து, உருவச் செந்தினை குருதியொடு தூஉய், முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடு நாள், ஆரம் நாற, அரு விடர்த் ததைந்த சாரற் பல் பூ வண்டு படச் சூடி, களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல, நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை- தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப, இன் உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம் மலிந்து, நக்கனென் அல்லெனோ யானே-எய்த்த நோய் தணி காதலர் வர, ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே?
என்பது வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்து, தலைமகள்
ஆற்றாளாக,தோழி தலைமகனை இயற்பழிப்ப, தலைமகள் இயற்பட
மொழிந்தது;தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாக, தோழியாற்
சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - வெறி
பாடிய காமக் கண்ணியார்.
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல், பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி; புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ, காடே கம்மென்றன்றே, அவல, கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர், பதவின் பாவை, முனைஇ, மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ, தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே; அனையகொல்-வாழி, தோழி!-மனைய தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும் மௌவல், மாச் சினை காட்டி, அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!
என்பது தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன, தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை, சிதரல் அம் துவலை தூவலின், மலரும் தைஇ நின்ற தண் பெயல் கடை நாள், வயங்கு கதிர்
|