| அறுதுறை அயிர் மணற் படுகரைப் போகி, சேயர்' என்றலின், சிறுமை உற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க, அழாஅம் உறைதலும் உரியம்-பராரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு, மெய் இவண் ஒழியப் போகி, அவர் செய்வினை மருங்கில் செலீஇயர், என் உயிரே! |
|
தலைமகன் பிரிவின்கண்
தலைமகள் தோழிக்குச் சொல்லியது. -
கல்லாடனார்
|
| 'கேளாய், எல்ல! தோழி! வேலன் வெறி அயர் களத்துச் சிறுபல தாஅய விரவு வீ உறைத்த ஈர்நறும் புறவின், உரவுக் கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு, அரவு நுங்கு மதியின், ஐயென மறையும் சிறு புன் மாலையும் உள்ளார் அவர்' என, நப் புலந்து உறையும் எவ்வம் நீங்க, நூல் அறி வலவ! கடவுமதி, உவக்காண்- நெடுங் கொடி நுடங்கும் வான்தோய் புரிசை, யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் வானக மீனின் விளங்கித் தோன்றும், அருங் கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த் திருநகர் அடங்கிய மாசு இல் கற்பின், அரி மதர் மழைக் கண், அமை புரை பணைத்தோள், அணங்குசால், அரிவையைக் காண்குவம்- பொலம்படைக் கலி மாப் பூண்ட தேரே. |
|
என்பது வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
|
| அழியா விழவின், அஞ்சு வரு மூதூர்ப் பழிஇலர் ஆயினும், பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல் சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக; நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும் நோய் இலராக, நம் காதலர்-வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச் சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளை நெற்று அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை, பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை, சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு, நம் நீத்து உறையும் பொருட்பிணிக் கூடாமையின், நீடியோரே. |
|  |