| திதலை மாமை தளிர்வனப்பு அழுங்க, புதல் இவர் பீரின் எதிர்மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுதுஎழில் மழைக்கண் கலுழ, நோய்கூர்ந்து, ஆதி மந்தியின் அறிவு பிறிதுஆகி, பேதுற் றிசினே - காதல்அம் தோழி! காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி, ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூ, கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம் காடுஇறந் தனரே, காதலர்; அடுபோர், வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை, ஈர்எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போலக் கலங்கின்று மாது, அவர்த் தெளிந்த என் நெஞ்சே. |
| மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி, புள்ளுப்புணர்ந்து இனிய ஆக, தெள்ஒளி அம்கண் இருவிசும்பு விளங்க, திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்து, கடிநகர் புனைந்து, கடவுட் பேணி, படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ, வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று, பூக்கணும் இமையார் நோக்குபு மறைய, மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை, பழங்கன்று கறித்த பயம்புஅமல் அறுகைத் தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத் தண்நறு முகையொடு வெண்நூல் சூட்டி, தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி, மழைபட் டன்ன மணல்மலி பந்தர், இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றி, தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின், 'உவர் நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி! முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ, பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர் உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின், உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப, மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென நாணினள் இறைஞ்சி யோளே-பேணி, பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவி, சுரும்புஇமிர் ஆய்மலர் வேய்ந்த இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே. |