| பா டும்மே; அலமரல் மழைக்கண் அமர்ந்து நோக்காள் அலையல்-வாழி! வேண்டு, அன்னை!-உயர்சிமைப் பொதும்பில், புன்னைச் சினைசேர்பு இருந்த வம்ப நாரை இரிய, ஒருநாள், பொங்குவரல் ஊதையொடு புணரி அலைப்பவும், உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை இருங்கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி வயச்சுறா எறிந்தென, வலவன் அழிப்ப, எழில்பயம் குன்றிய சிறைஅழி தொழில நிரைமணிப் புரவி விரைநடை தவிர, இழுமென் கானல் விழுமணல் அசைஇ, ஆய்ந்த பரியன் வந்து, இவண் மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே! |
|
என்பது தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார்.
|
| அத்தப் பாதிரித் துய்த்தலைப் புதுவீ எரிஇதழ் அலரியொடு இடைபட விரைஇ, வண்தோட்டுத் தொடுத்த வண்டுபடு கண்ணி, தோல்புதை சிரற்றுஅடி, கோலுடை உமணர் ஊர்கண் டன்ன ஆரம் வாங்கி, அருஞ்சுரம் இவர்ந்த அசைவுஇல் நோன்தாள் திருந்துபகட்டு இயம்பும் கொடுமணி, புரிந்துஅவர் மடிவிடு வீளையொடு, கடிதுஎதிர் ஓடி, ஓமைஅம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு ஏமம் செப்பும் என்றூழ் நீள்இடை அரும்பொருள் நசைஇ, பிரிந்துஉறை வல்லி, சென்றுவினை எண்ணுதி ஆயின், நன்றும், உரைத்திசின் வாழிஎன் நெஞ்சே!-'நிரைமுகை முல்லை அருந்தும் மெல்லிய ஆகி, அறல்என விரிந்த உறல்இன் சாயல் ஒலிஇருங் கூந்தல் தேறும்' என, வலிய கூறவும் வல்லையோ, மற்றே? |
|
என்பது தலைமகன்
தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. -
ஒரோடோகத்துக் கந்தரத்தனார்.
|
| மதிஇருப் பன்ன மாசுஅறு சுடர்நுதல் பொன்நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ! யாங்குஆ குவள்கொல் தானே? விசும்பின் எய்யா வரிவில் அன்ன பைந்தார், செவ்வாய் சிறுகிளி சிதைய வாங்கி, பொறைமெலிந் திட்ட புன்புறப் பெருங்குரல் வளைசிறை வாரணம் கிளையொடு கவர, ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள் நீவந்து அளிக்குவை எனினே மால்வரை மைபடு விடரகம் துழைஇ, ஒய்யென அருவிதந்த, அரவு உமிழ் திருமணி பெருவரைச் சிறுகுடி மறுகுவிளக் குறுத்தலின், இரவும் இழந்தனள்; அளியள் |
|  |