|
மடநல் லாளை ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும், இன்நகை முறுவல் ஏழையைப் பல்நாள், கூந்தல் வாரி, நுசுப்பு இவர்ந்து, ஓம்பிய நலம்புனை உதவியும் உடையன் மன்னே; அஃதுஅறி கிற்பினோ நன்றுமன் தில்ல; அறுவை தோயும் ஒருபெருங் குடுமி, சிறுபை நாற்றிய பல்தலைக் கொடுங்கோல், ஆகுவது அறியும் முதுவாய், வேல! கூறுக மாதோநின் கழங்கின் திட்பம்; மாறா வருபனி கலுழும் கங்குலில், ஆனாது துயரும்எம் கண்இனிது படீஇயர், எம்மனை முந்துறத் தருமோ? தன்மனை உய்க்குமோ? யாதுஅவன்
குறிப்பே? இது மகட் போக்கிய நற்றாய் சொல்லியது. - கயமனார். நெடுங்கொடி நுடங்கும் நறவுமலி பாக்கத்து, நாள்துறைப் பட்ட மோட்டு இரு வராஅல் துடிக்கண் கொழுங்குறை நொடுத்து, உண்டு ஆடி, வேட்டம்மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல்இலை, அமலை வெஞ்சோறு தீம்புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து, விடியல் வைகறை இடூஉம் ஊர! தொடுகலம்; குறுக வாரல்-தந்தை கண்கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண்போகிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியின் இயலும் நின்நலத் தகுவியை முயங்கிய மார்பே. என்பது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. -
பரணர். மாமலர் வண்ணம் இழந்த கண்ணும், பூநெகிழ் அணையின் சாஅய தோளும், நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல்நலம் இழந்த துயரமொடு, என்னதூஉம் இனையல் - வாழி, தோழி!- முனைஎழ முன்னுவர் ஓட்டிய முரண்மிகு திருவின், மறம்மிகு தானை, கண்ணன் எழினி தேம்முது குன்றம் இறந்தனர் ஆயினும், நீடலர் யாழநின் நிரைவளை நெகிழ- தோள்தாழ்பு இருளிய குவைஇருங் கூந்தல் மடவோள் தழீஇய விறலோன் மார்பில் புன்தலைப் புதல்வன் ஊர்புஇழிந் தாங்கு கடுஞ்சூல் மடப்பிடி தழீஇய வெண்கோட்டு இனம்சால் வேழம், கன்றுஊர்பு இழிதர, பள்ளி கொள்ளும் பனிச்சுரம் நீந்தி, ஒள்இணர்க் கொன்றை ஓங்குமலை அத்தம் வினைவலி யுறூஉம் நெஞ்சமொடு இனையர் ஆகிநப் பிரிந்திசி னோரே.
என்பது பிரிவிடை
வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது.
-மாமூலனார்
'கூறுவம் கொல்லோ? கூறலம் கொல்?' எனக் கரந்த காமம் கைந்நிறுக் கல்லாது, நயந்துநாம் விட்ட நல்மொழி நம்பி, அரைநாள் யாமத்து விழுமழை கரந்து, கார்விரை கமழும் கூந்தல், தூவினை நுண்நூல் ஆகம் பொருந்தினள், வெற்பின் இளமழை சூழ்ந்த மடமயில் போல, வண்டுவழிப் படர, தண்மலர் வேய்ந்து, வில்வகுப் புற்ற நல்வாங்கு குடைச்சூல் அம்சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து, துஞ்சுஊர் யாமத்து முயங்கினள், பெயர்வோள், ஆன்ற கற்பின் சான்ற பெரியள், அம்மா அரிவையோ அல்லள்; தெனாஅது ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பில், கவிரம் பெயரிய உருகெழு கவாஅன், ஏர்மலர் நிறைசுனை உறையும் சூர்மகள் மாதோ என்னும்-என் நெஞ்சே!
|