புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   482
Zoom In NormalZoom Out

விளைவை     ஒழியினும்  எல்லாவுயிர்கட்கும் உயிர்வாழ்க்கையில்லை;
அதுபோல     இன்னமும்     எமக்குப்     பரிசில்     தாருமென்று
சொல்லிஎம்போல்வார்     இரப்பின்   அவர்க்கு   முன்னும்   பரிசில்
கொண்டீரென்று    நும்போல்வார்   மறுத்தல்   இன்னாது;   கேளாய்:
இயற்றப்பட்ட  தேரையுடைய  அண்ணலே! இல்லாத பொருளைத் தேடி
நிரப்பமாட்டாத     வறுவியோரினும்,    அவராற்    பரிசில்நினைந்து
வரப்படுவார்   (வரப்படுவார்-கொடையாளர்)    கொடாராயின்   அவ்
விரப்போரால்   நச்சப்படும்   இன்பத்தையிழப்பர்;   தம்  வறுமையாற்
கொடுக்கமுடியாமையின்   நாணி   அவரெதிர்முகம்   நோக்கமாட்டாது
இன்பமிழக்கும்   மாந்தர்   தன்மையையுமல்லை    நீ,  இறந்துபடுவை;
பகைவரது     அரிய     அரண்     அவரிடத்ததாகவும்    அதனை
அழித்துக்கொள்ளுவதன்முன்னே        நும்முடையதெனப்பாணர்க்குக்
கடனாகக்கொடுக்கும்       வென்றியோடுகூடிய          வண்மையை
யுடையோயாதலான்  எம்  இறைவ!  நீ  இரப்போரைப்  பாதுகாத்தலை
முறைமையாகப் பரிகரிப்பாயாக-எ - று.
 

அனையையுமல்லை     யென்பதற்கு     இரவலர்    வேண்டுமளவும்
பாணியாது   (தாமதியாது)   முன்னே   அளித்தலின்,  நசையிழப்போர்
தன்மையையுடையாயல்லை யென்றுமாம்.
 

எம்மனோரென்றது பிறரை நோக்கியன்றெனவுணர்க. 

‘பொழிந்தென’,   ‘விளைந்தென’   என்பனவற்றை  வினையெச்சமாக்கி
மாறினும் கரப்பினுமென்னும் வினையோடு முடிப்பினும் அமையும்.
 

(204) ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணா ராகுப நீர்வேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்
புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற்
புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.
 

திணையும் துறையும் அவை. (பாடாண்டிணை, பரிசிற்றுறை) 

வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது. 

(இ-ள்.)  இழிந்தோன்கூற்றால்     ஈயெனச்       சொல்லி  இரத்தல்
இழிந்தது;   அவ்வீயென்றதனெதிர்   ஈயேனென்று சொல்லி  மறுத்தல்
அவ்விரத்தலினும்     இழிந்தது;      ஒருவன்    இரப்பதன்முன்னே
அவன்குறிப்பை   முகத்தானுணர்ந்து  இதனைக்  கொள்வாயாகவென்று
சொல்லித்  தான்  இரந்துகொடுத்தல்  ஒருவற்கு  உயர்ந்தது;  அதனை
அவன்  அவ்வாறு  கொடுப்ப அதனெதிர் கொள்ளேனென்று  சொல்லி
மறுத்தல்   அக்கொடையினும்    உயர்ந்தது;  தெளிந்த  நீர்ப்பரப்பின்
ஒலிக்கும்    திரையையுடைய   பெரியகடல்   நீரை   உண்ணாராவர்,
தண்ணீரை   விரும்பினோர்;   ஆவும்மாவுஞ்சென்று  நீரை  உண்ணக்
கலங்கிச்  சேற்றொடுகூடிய   சிறுமையையுடைத்தேயாயினும்  உண்ணும்
நீரையுடைய     தாழ்ந்தவிடத்துச்    செல்லும்    வழி    பலவாகும்;
தாம்புறப்பட்டுச்  செல்லப்பட்ட   வழியிடத்து அப்பொழுதுசெய்யும் புள்
நிமித்தத்தையும்   புறப்பட்ட    முழுத்தத்தையும்   (முகூர்த்தத்தையும்)
பழித்தலல்லது  தாம்  பரிசில்  பெறக்கருதிச் செல்லப்பட்டோரை அவர்
ஈத்திலராயினும்    பரிசிலர்     பழியார்;    அதனால்   நீ   எனக்கு
இன்னையாயினும்   வெறேன்,   வாழ்வாயாக,  ஓரி!  ஆகாயத்தின்கண்
மின்முதலிய     தொகுதியையுடைய      மழைபோல     யாவர்க்கும்
எப்பொருளையும் வரையாது வழங்கும் வண்மையை யுடையோய்!