புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   492
Zoom In NormalZoom Out

உதிர்ந்த     எருவையுடைய   தெருவின்கண்  போதொடு  தழைத்த
வேளையினது   வெள்ளிய   பூவை   வெளிய   தயிரின்கட்  பெய்து
இடைமகள்  அடப்பட்ட  அழகிய புளிங்கூழையும் அவரை கொய்வார்
நிறையவுண்ணும்     தென்திக்கின்கட்     பொதியின்மலையையுடைய
பாண்டியனது   நல்ல   நாட்டினுள்ளும்   சேய்த்தாகிய  பிசிரென்னும்
ஊரிடத்தானென்று   சொல்லுவார்,   என்னுயிரைப்  பாதுகாப்போனை;
அவன்  எமக்குச் செல்வ முடைய காலத்து நிற்பினும் யாம் இன்னாமை
யுறுங்காலத்து ஆண்டு நில்லான்-எ - று.

மன் : அசைநிலை.

(216) கேட்டன் மாத்திரை யல்ல தியாவதும்
காண்ட லில்லா தியாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமைய ராகினும்
அரிதே தோன்ற லதற்பட வொழுகலென்
றையங் கொள்ளன்மி னாரறி வாளீர்
இகழ்வில னினிய னியாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
தன்பெயர் கிளக்குங் காலை யென்பெயர்
பேதைச் சோழ னென்னுஞ் சிறந்த
காதற் கிழமையு முடைய னதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவ னொழிக்கவவற் கிடமே.
 

திணையும் துறையும் அவை.

அவன்  வடக்கிருந்தான்  பிசிராந்தையார்க்கு இடனொழிக்க வென்றது.
(கோப்பெருஞ்சோழன்)

(இ - ள்.) ‘நின்னை  அவன்  கேட்டிருக்கும்   அளவல்லது  சிறிது
பொழுதும்     காண்டல்கூடாது    பல்யாண்டுசெல்லத்  தவறின்றாக
மருவிப்போந்த    உரிமையையுடையோராயினும்    அரிதே தலைவ!
அவ்வழுவாத    கூற்றிலே   படவொழுகுதல்’     என்று    கருதி
ஐயப்படாதொழிமின்;  நிறைந்த  அறிவினையுடையீர்! அவன் என்னை
என்றும்  இகழ்ச்சியிலனாய்  இனிய  குணங்களையுடையன்;  பிணித்த
நட்பினையுடையன்;  புகழ் அழியவரூஉம் பொய்ம்மையை விரும்பான்;
தனது  பெயரை  பிறர்க்குச்  சொல்லும்பொழுது  என்னுடைய  பெயர்
பேதைமையையுடைய   சோழனென்று   எனது  பெயரைத்  தனக்குப்
பெயராகச்   சொல்லும்   மிக்க  அன்புபட்ட  உரிமையையுமுடையன்;
அதற்கு  மேலே  இப்படி யான் துயரமுறுங்காலத்து ஆண்டு நில்லான்;
இப்பொழுதே வருவன்; அவனுக்கு இடம் ஒழிக்க-எ - று.

‘அதற்பட’      என்பதற்கு   அவ்விறந்துபாட்டிலே   படவென்றும்,
‘இகழ்விலன்’     என்பதற்கு     இகழப்படுவன  குணமிலனென்றும்
உரைப்பினும் அமையும். 

பேதைச்சோழனென்றது, தான் தன்னை இழித்துக்கூறியது. 

(217) நினைக்குங் காலை மருட்கை யுடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினோ டீங்கிது துணிதல்
அதனினு மருட்கை யுடைத்தே பிறனாட்டுத்
தோற்றஞ் சான்ற சான்றோன் போற்றி
இசைமர பாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
அதனால், தன்கோ லியங்காத் தேயத் துறையும்
சான்றோ னெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை யிழந்தவிவ் வுலகம்
என்னா வதுகொ லளியது தானே.