புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   494
Zoom In NormalZoom Out

கருதாத  கூற்றம்   அவனது  இனிய உயிர் கொடுபோயிற்று; அதனால்,
பையாப்புற்ற     நம்முடைய     சுற்றத்தை     அணைத்துக்கொண்டு
அக்கூற்றத்தை   வைவேமாக  வாரீர்,  மெய்யுரையையுடைய  புலவீர்!
அகலிய  இடத்தினையுடைய  உலகம்  துன்பமிகக்  கேடில்லாத  நல்ல
புகழ்ச்சி   மாலையைச்   சூடி   நடப்பட்ட  கல்லாயினான்  எம்மைப்
பாதுகாப்போனெனச் சொல்லி-எ - று.

ஈத்தபுகழ்   ஈதலாலுளதாகிய   புகழெனவும்,   ஈத்தவன்பு   ஈத்தற்கு
ஏதுவாகிய அன்பெனவுங் கொள்க.

வாய்மொழிப்புலவீர்!     அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிருய்த்தது;
அதனாற்  புரவலன்  கல்லாயினனென  ஒக்கல் தழீஇ அதனை வைகம்
வம்மோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

சாயல்,    மைந்து,    புக்கிலென்பன    ஆகுபெயர்.    புக்கில்    :
வினைத்தொகை.

கேடென்பது கெடுவெனக் குறைந்து நின்றது.

(222) அழலவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவ ணொழித்த வன்பி லாள
எண்ணா திருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை,  தன்மகன்  பிறந்தபின்  பெயர்த்துச்  சென்று  பொத்தியார்
எனக்கு இடந்தாவென்று சொற்றது.

(இ - ள்.)  தீயால்  விளங்கிய ஒளியையுடைய ஆபரணத்தாற் சிறந்த
வடிவினையுடையளாய்  நின்  நிழலினும்  ஒரு  பொழுதும்  நீங்காத நீ
விரும்பத்தக்க  மனைவி  பெறப்பட்ட  புகழமைந்த  பிள்ளையானவன்
பிறந்தபின்  வாவெனச்சொல்லி என்னை இவ்விடத்தினின்றும் போக்கிய
என்னோடு   உறவில்லாதவனே!   உன்னோடு   என்னிடை  நட்பைக்
கருதாதிருப்பையல்லை;  புகழைவிரும்புவோய்!  நீ  எனக்குக்  குறித்த
இடம் யாது? சொல்லுவாயாக-எ-று.

மற்று : அசை. 

அழல்போலப் பாடம் (ஒளி) செய்யும் மேனியெனினும் அமையும்.

(223) பலர்க்குநிழ லாகி யுலகமீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுக லாகியக் கண்ணும்
இடங்கொடுத் தளிப்ப மன்ற வுடம்போ
டின்னுயிர் விரும்புங் கிழமைத்
தொன்னட் புடையார் தம்முழைச் செலினே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

கல்லாகியும்   இடங்கொடுத்த   கோப்பெருஞ்சோழனை   வடக்கிருந்த
பொத்தியார் பாடியது. 

(இ - ள்.)     பலர்க்கும்    அருளுடைமையான்    நிழலையொத்து
உலகத்தார்     மிகுத்துச்     சொல்ல     உலகத்தையாளுந்தன்மை
முடியச்செலுத்துதற்கு  மறுமையை  நினைத்தால்  முடிவுபோகாமையின்
வடக்கிருத்தற்கு  வரைந்த சிறிய இடத்தின்கண் இருந்து உயிர்நீத்தலின்
நிலைபெற   நடப்பட்ட   கல்லான   இடத்தும்  இடங்கொடுத்தளிப்பர்
நிச்சயமாக;   உடம்போடு  இனியவுயிர்  விரும்புமாறுபோல  விரும்பும்
உரிமையையுடைய   பழையதாகிய   நட்பையுடையோர்   தம்மிடத்தே
செல்லின்-எ - று. 

மீக்கூறியென்பது    மீக்கூறவெனத்    திரிக்கப்பட்டது;   ஆணைகூறி
யென்றுமாம். 

தொன்னட்புடையோர்  தம்முழைச் செலின், இடங்கொடுத்தளிப்பவெனக்
கூட்டி வினைமுடிவுசெய்க. 

அவன் நட்பினை வியந்து கூறியது.

(224) அருப்பம் பேணா தமர்கடந் ததூஉம்
துணைபுண ராயமொடு தசும்புடன் றொலைச்சி
இரும்