ழித்த வேந்துவேற் றானையொ
டாற்ற லென்பதன் றோற்றங் கேளினிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங் குரீஇத் தூங்குகூ டேய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினு நோகோ யானே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) சோழன்நலங்கிள்ளியை ஆலத்தூர்கிழார் பாடியது. (இ - ள்.) முன்செல்லும் தூசிப்படையோர் பனையின்கண் உளதாகிய நுங்கினது இனிய செறிவை அயில, இடைச்செல்வோர்பழத்தினது செவ்விக்கனியை நுகர, பின்செல்வோர் நீங்கிய வாயையுடைய பிசிருடனே சுடப்பட்ட கிழங்கினை நுகர இப்படி ஒழுங்குடைத்தாகி இடமகன்ற உலகத்து வலமுறையாகச் சூழ்ந்து மன்னரை வலிகெடுத்த மேம்பட்ட வேலையுடைய சேனையுடனே கூடிய வலியென்று சொல்லப்பட்டதன் விளைவை இனிக் கேட்பாயாக: கள்ளியோங்கிய களர்நிலமாகிய பாழ்பட்ட இடத்து முள்ளுடைத்தாகிய பெரிய புறங்காட்டின்கண்ணதாயிற்று, பெரிதும் சேட்சென்னிநலங்கிள்ளி கேட்பான் கொல்லோ என அஞ்சி இனிய ஓசையையுடைய முரசுடனே வெற்றியைச் சொல்லாநிற்க முன்பு தூக்கணங்குருவியினது தூங்கப்பட்ட கூட்டையொப்ப ஒருபக்கத்தே தூங்கப்பட்ட வலத்திலே புரிந்த திரிந்த வாயையுடைய சங்கம்; இப்பொழுது உலகங்காக்கும் அரசரது வாயிலிடத்தே பள்ளியெழுச்சிக் காலத்தே தோன்றினும் அதனைக் கேட்டு இறந்துபடாது நோமளவினே னாயினேன் - எ - று. முன்பு நலங்கிள்ளிசேட்சென்னி கேட்குவன்கொல்லென ஒரு சிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலாநிற்கப் பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேனெனக்கூட்டி வினைமுடிவுசெய்க. கேளினியென்றது நெஞ்சினை. ‘வென்றிநுவலா’ என்றும், ‘காலைதோன்றின’என்றும் பாடமோதுவாரும் உளர்.
(226) செற்றன் றாயினுஞ் செயிர்த்தன் றாயினும்
உற்றன் றாயினு முய்வின்று மாதோ
பாடுநர் போலக் கைதொழு தேத்தி
இரந்தன் றாகல் வேண்டும் பொலந்தார்
மண்டமர் கடக்குந் தானைத்
திண்டேர் வளவற் கொண்ட கூற்றே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது. (இ - ள்.) தன்மனத்துள்ளே கறுவுகொண்டதாயினும் வெளிப்பட நின்று வெகுண்டதாயினும் உற்றுநின்று கையோடு மெய்தீண்டி வருத்திற் றாயினும் அதற்குப் பிழைத்தலுண்டாகாது; பாடுவாரைப்போலத் தோன்றி நின்று கையாற்றொழுது வாழ்த்தி இரந்து உயிர்கொண்டதாகல் வேண்டும்; பொன்னான் இயன்ற மாலையினையும் மண்டியபோரின்கண் எதிர்நின்று வெல்லும் படையினையும் திண்ணிய தேரினையுமுடைய வளவனைக் கொண்ட கூற்று-எ - று.
|