புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   497
Zoom In NormalZoom Out


நிறைந்த     நெற்பொலி   காவலின்றியே  கிடப்பவும் எதிரில்நின்று
தடுக்கும்  பகையைத் துரந்த நிலங்கலங்காத செவ்விய ஆட்சியினையும்
உலகத்தார்    புகழ்ந்த    விளங்கிய    போரைச்செய்யும்   ஒள்ளிய
வாளினையும்   தப்பாத   மொழியினையுமுடைய   எழினி   பொருது
போர்க்களத்தின்கண்ணே   வீழப்,   பெற்ற   தாயால்  கைவிடப்பட்ட
உண்ணாத  குழவியை  யொப்பத் தன்னைமேவிய கிளை இடந்தோறும்
இடந்தோறும்  வருந்த  மிக்க  பசிவருத்திய  கலக்கமுற்ற  துன்பமிக்க
நெஞ்சமோடு   அவனைஇழந்து   வருத்தமுற்றுக்   கிடந்த   உலகத்து
விதனத்தினும்மிகப்  பெரிதாக  நீ  இழந்தாய்,  அறமில்லாத  கூற்றமே!
வாழ்தலேதுவாக  வரும்வயலிடத்து  விளையும் வருவாயையறியானாய்த்
தளர்ந்த  குடியையுடைய  உழவன்  விதையை  உண்டாற்போல  இந்த
ஒருவனது  பெறுதற்கரிய உயிரை உண்டிலையாயிற் பகைவருடைய பல
உயிரையும்  பருகி  நிறைவை,  அவன் போரிற் பகைவரைக் கொல்லும்
களத்தின்கண்-எ - று.

மன் :கழிவின்கண் வந்தது.

உயிர்    உண்ணவும்  பருகவும் படுவதன்றாயினும் அவ்வாறு கூறுதல்,
“அகலிரு விசும்பிற் பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப்
பருதி” (பெரும்பாண். 1 - 2) என்றாற்போல ஓரணி குறித்து நின்றது.

எழினி    களஞ்சேர  ஒருவனாருயிர் உண்ணாயாயின் அவன் அமரடு
களத்துப்  பல்லுயிரும்  பருகி ஆர்குவை; அதுகழிந்ததேயெனக் கூட்டி
வினைமுடிவு செய்க.

‘கடும்பசி கலங்கிய’ என்றும் பாடம். 

(231) எறிபுனக் குறவன் குறைய லன்ன
கரிபுற விறகி னீம வொள்ளழற்
குறுகினுங் குறுகுக குறுகாது சென்று
விசும்புற நீளினு நீள்க பசுங்கதிர்த்
திங்க ளன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.
 

திணையும்   துறையும்   அவை.  திணை  -  பொதுவியல்;  துறை  -
கையறுநிலை.)

அதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.

(இ - ள்.)     வெட்டிச்சுட்ட     கொல்லைநிலத்துக்   குறவனால்
தறிக்கப்பட்ட   துண்டம்  போன்ற  கரிந்த  புறத்தையுடைய  விறகால்
அடுக்கப்பட்ட  ஈமத்தின்கண்  எரிகின்ற ஒள்ளிய அழலின்கண் உடல்
சுடச் சென்று அணுகினும் அணுகுக; அவ்வாறு அணுகாதுபோய் வறிதே
ஆகாயத்தையுற   ஓங்கினும்  ஓங்குக;  குளிர்ந்த  சுடரையுடைய  மதி
போலும்     வெண்கொற்றக்     குடையையுடைய     ஒள்ளிய
ஞாயிற்றையொப்போனது புகழ்மாயா-எ - று.

ஈமமென்பது பிணஞ்சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு.

இனி     ஈமவொள்ளழல்  இவனுடல்  சிதையாமற் சிறுகினுஞ் சிறுகுக;
அன்றிச்   சிதையும்படி   சென்று   நீளினும்   நீளுக;  இவன்  புகழ்
மாயாவெனினும் அமையும்.

‘எரிபுனக் குறவன்’ என்று பாடமோதுவாரும் உளர். 

(232) இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழு நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே.
 

திணையும்   துறையும்   அவை.   திணை   -   தும்பை;   துறை  -
பாண்பாட்டு)

அவனை    அவர்    பாடியது.    (அதியமான்    நெடுமானஞ்சியை
ஒளவையார் பாடியது).

(இ - ள்.) அவனையின்றிக் கழி