வகைப்பட்ட இரவலர் எம்முடைய பறையொலி போலும் ஒலியையுடைய அருவியையுடைய நல்ல மலைநாட்டுக்கு வேந்தனாகியவன் நோயையுடையனல்லனாகப் பெறின் அழகிதென இரங்கிய நெஞ்சத்துடனே மடிந்தவுள்ளம் பரப்ப
யாம் அஞ்சினேம்;அஞ்சினபடியே ஏழாம் நாள் வந்ததாகலின் இன்று, வலியையுடைய யானை கையை நிலத்தே யிட்டு வைத்துத் துஞ்சவும், திண்ணிய வாராற்பிணிக்கப்பட்ட முரசம் கண்கிழிந்து உருளவும், உலகிற்குக் காவலாகிய வெண்கொற்றக்குடை கால் துணிந்து உலறவும், காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும் இப்படிக்கிடக்கத் தேவருலகத்தை அடைந்தான்; ஆகையாலே, ஒள்ளிய வளையையுடைய மகளிர்க்கு
மேவப்பட்ட துணையாகித் தனக்குத் துணையாகிய மகளிரையும் மறந்தான்கொல்லோ? பகைவரைப் பிணித்துக்கொள்ளும் வலியையும் நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத வண்மையையுமுடைய நீலமலை போலும் மாயோன்-எ-று. மன்னும், தில்லும் : அசை. கயத்துக் குளக்கடையென்க. நற்றிசையாகிய கிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும் மேற்குமாகிய இரண்டனுள் ஒருதிசைக்கண் வீழ்ந்ததென்றும் ஆம்; அன்றி வடக்குங்கிழக்குஞ் செல்லாதெனவே வடகிழக்கே வீழ்ந்ததென்றுமாம். படவென்றல் இன்னாமையிற் கைவைத்துறங்கவும் கண்கிழிந்துருளவும் கால்பரிந்துலறவும் கதியின்றி வைகவுமெனத் தகுதிபற்றிக் கூறப்பட்டன. மாயோன் மகளிர்க்குறுதுணையாகித் தன்றுணையாயம் மறந்தனனோ? இல்லையோ? யாம் மறவா நிலைமையமாயினமென இரங்கிக் கூறியவாறு. ‘அஞ்சின மெழுநாள் வந்தன் றின்றென’ என்பதூஉம் பாடம். (230)
கன்றம ராயங் கானத் தல்கவும்
வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும்
களமலி குப்பை காப்பில வைகவும்
விலங்குபகை கடிந்த கலங்காச் செங்கோல்
வையகம் புகழ்ந்த வயங்குவினை யொள்வாட்
பொய்யா வெழினி பொருதுகளஞ் சேர
ஈன்றோ ணீத்த குழவி போலத்
தன்னமர் சுற்றந் தலைத்தலை யினையக்
கடும்பசி கலக்கியவிடும்பைகூர் நெஞ்சமொடு
நோயுழந்து வைகிய வுலகினு மிகநனி
நீயிழந் தனையே யறனில் கூற்றம்
வாழ்தலின் வரூஉம் வயல்வள னறியான்
வீழ்குடி யுழவன் வித்துண் டாஅங்
கொருவ னாருயி ருண்ணா யாயின்
நேரார் பல்லுயிர் பருகி
ஆர்குவை மன்னோவவ னமரடு களத்தே. திணை - அது; துறை -கையறுநிலை. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில்கிழார் பாடியது. (இ - ள்.)
கன்றைமேவிய ஆனிரை மேய்ந்தகாட்டிடத்தே பிறிதொன்றால் ஏதமின்றிக் கிடப்பவும் சுரத்தில் நடத்தலால் வெம்மையுற்றகாலினையுடைய வழிபோவார் தாம்வேண்டியவிடத்தே தங்கவும் களத்தின்கண் |