புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   502
Zoom In NormalZoom Out

கின்ற     காலையும்    மாலையும்    இனி   இல்லையாகுக;  யான்
உயிர்வாழுநாளும்  எனக்கு  ஒருபயன்படாமையின்  அவை யல்லவாக;
நடப்பட்ட   கல்லின்கட்   பீலியைச்   சூட்டி  நாரால்  அரிக்கப்பட்ட
தேறலைச்   சிறிய  கலத்தான்  உகுப்பவும்  அதனைக்  கொள்வனோ,
கொள்ளானோ   சிகரமோங்கிய   உயர்ந்த   மலைபொருந்திய   நாடு
முழுவதும் கொடுப்பவும் கொள்ளாதவன்?-எ - று.

நாடுடன்   கொடுப்பவும்  கொள்ளாதோன்  நாரரி  சிறுகலத்துகுப்பவும்
கொள்வன் கொல்லோவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.

(233)பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாவடி யானை பரிசிலர்க் கருகாச்
சீர்கெழு நோன்றா ளகுதைகட் டோன்றிய
பொன்புனை திகிரியிற் பொய்யா கியரோ
இரும்பா ணொக்கற் றலைவன் பெரும்பூட்
போரடு தானை யெவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பலவென
வைகுறு விடிய லியம்பிய குரலே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

(இ - ள்.) பொய்யாகுக;   பொய்யாகுக;   பரந்த அடியினையுடைய
யானையைப்  பரிசிலர்க்குக்  குறைவறக் கொடுக்கும் சீர்மைபொருந்திய
வலிய   முயற்சியையுடைய  அகுதையிடத்து  உளதாகிய  பொன்னாற்
செய்யப்பட்ட  ஆழிபோலப்  பொய்யாகுக;  பெரிய  பாண்சுற்றத்திற்கு
முதல்வன்,    பேரணிகலத்தினையுடைய,    போரின்கட்    கொல்லும்
படையினையுடைய  எவ்வியது  மார்பின்கண் வேல் தைத்த சிறந்தபுண்
பலவென வைகுதலுற்ற விடியற்காலத்துச் சொல்லிய வார்த்தை-எ - று.

பெரும்பூண் மார்பென இயையும்.

திகிரியென்றது திகிரி தைத்ததென்று பிறந்த வார்த்தையை.

பொன் : ஈண்டு இரும்பு.

அடுக்கு விரைவின்கண் வந்தது.

இயம்பிய குரல் பொய்யாகியரெனக்கூட்டுக.

(234)நோகோ யானே தேய்கமா காலை
பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
தன்னமர் காதலி புன்மேல் வைத்த
இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
உலகுபுகத் திறந்த வாயிற்
பலரோ டுண்டன் மரீஇ யோனே.
  

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை  அவர்  பாடியது.  (வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார்
பாடியது)

(இ - ள்.) நோவக்கடவேனோ  யான்? எனது வாழக்கடவ மிக்க நாள்
மாய்வதாக;   பிடியினது  அடிபோன்ற  சிறிய  இடத்தினை  மெழுகித்
தன்னை  மேவப்பட்ட  காதலி  புன்மேல்  வைக்கப்பட்ட இனிய சிறிய
பிண்டத்தை   எவ்வாறு  உண்டான்கொல்லோ?  உலகத்தார்  யாவரும்
புகும்பரிசு   திறந்த   வாயிலையுடைய  பலரோடுங்  கூடி  உண்டலை
மருவியோன்-எ - று.

இன்சிறு பிண்டமென்றது இகழ்ச்சிக் குறிப்பு.

பலரோடு