புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   507
Zoom In NormalZoom Out


பிணப்படுக்கை    உங்களுக்கு  அரிதாவதாகுக; எமக்கு   எம்முடைய
பெரிய     தோளையுடையனாகிய    கொழுநன்    இறந்துபட்டானாக,
முகையில்லையாக    வளவிய    இதழ்மலர்ந்த    தாமரையையுடைய
நீர்செறிந்த பெரிய பொய்கையும் தீயும் ஒரு தன்மைத்து - எ - று.

தில் :விழைவின்கண் வந்தது.

எமக்குப்     பொய்கையும்     தீயும்     ஒருதன்மைத்து;    நுமக்கு
அரிதாகுகவெனக் கூட்டுக.

(247) யானை தந்த முளிமர விறகிற்
கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி
மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின்
நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப்
பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
தெருமரு மம்ம தானேதன் கொழுநன்
முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச்
சிறுநனி தமிய ளாயினும்
இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், ஆனந்தப்பையுள்) 

அவள் தீப்பாய்வாளைக் கண்டு மதுரைப்பேராலவாயார் சொல்லியது. 

(இ - ள்.)   யானை  கொண்டுவரப்பட்ட   உலர்ந்த  மரத்துவிறகால்
வேடர்  மூட்டப்பட்ட  கடைந்துகொள்ளப்பட்ட எரியாகிய விளக்கினது
ஒளியை   யுடைத்தாகிய   மடவிய   மானாகிய பெரியநிரை  வைகிய
உறக்கத்தை  எழுப்பி  மந்தி  தூக்கும் அணங்குடைத்தேவியையுடைய
முற்றத்து நீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில் வீழப் பெரிய துன்பமேவிய 

கண்ணையுடையளாய்ப்  புறங்காட்டைப்  பார்த்துத் தான் சுழலும், தன்
தலைவன் முழவினது கண் மார்ச்சனையுலராத காவலையுடைய அகலிய
கோயிலுள்    மிகச்   சிறிது   பொழுது   தனித்திருப்பினும்   இனிய
உயிர்தளரும் தன் இளமை புறங்கொடுத்து- எ-று. 

.......யானவற்கு அஞ்சி நடுங்குதல்....... 

இளமை     புறங்கொடுத்துப்     பெருங்காடு     நோக்கித்    தான்
தெருமருமெனக் கூட்டுக. 

அம்ம: அசை. 

(248) அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளைய மாகத் தழையா யினவே
இனியே, பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்
தின்னா வைக லுண்ணும்
அல்லிப் படூஉம் புல்லா யினவே.
 

திணை - அது; துறை - தாபதநிலை. (பொதுவியல்) 

.......ஒக்கூர் மாசாத்தனார் பாடியது. 

தாபதநிலையாவது:- 

‘’குருந்தலர் கண்ணிக் கொழுநன் மாய்ந்தெனக்
கருந்தடங் கண்ணி கைம்மைகூறின்று’’

                                  (பு. வெ.257) 

(இ - ள்.)  இரங்கத்தக்கன, சிறிய வெளிய ஆம்பல்; அவைதாம், யாம்
இளையேமாயிருக்கமுற்காலத்துத் தழையாயுதவின; இக்காலத்துப் பெரிய
செல்வத்தையுடைய   தலைவன்  இறந்தானாக  உண்ணுங்காலை  மாறி
இன்னாத  வைகும்பொழுதின்கண் உண்ணும் தம் அல்லியிடத்துண்டாம்
புல்லரிசியாய் உதவின-எ - று. 

தாம்  இன்புறுங்காலத்தும்  துன்புறுங்காலத்தும்  துணையாய்  உதவின
வாதலான், அளியவாயினவென ஆம்பலைநோக்கிக் கூறியவாறாயிற்று. 

நெல்லலாவுணவெல்லாம் புல்லென்றல் மரபு. 

(249) கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்பக்
கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
எரிப்பூம் பழன நெரித்துடன் வலைஞர்
அரிக்