கடும்பும் பையென் றனவே
தோடுகொண் முரசுங் கிழிந்தன கண்ணே
ஆளில், வரைபோல் யானையு மருப்பிழந் தனவே
வெந்திறற் கூற்றம் பெரும்பே துறுப்ப
எந்தை யாகுல வதற்பட லறியேன்
அந்தோ வளியேன் வந்தனென் மன்ற
என்னா குவர்கொலெற் றுன்னி யோரே
மாரி யிரவின் மரங்கவிழ் பொழுதின்
ஆரஞ ருற்ற நெஞ்சமொ டொராங்குக்
கண்ணி லூமன் கடற்பட் டாங்கு
வரையளந் தறியாத் திரையரு நீத்தத்
தவல மறுசுழி மறுகலிற்
றவலே நன்றுமற் றகுதியு மதுவே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) வெளிமான் துஞ்சியபின் அவர் பாடியது. (இ - ள்.) பிணமிட்டுப் புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்த புறத்தேயிருந்த செவி சிவந்த கழுகின்சேவலும் பொகுவலென்னும்புள்ளும் அஞ்சாவாய் வாய்வலிய காக்கையும் கோட்டானும் கூடிப் பேயினத்துடனே தாம் விரும்பியவழியே இயங்கும் சுடு காட்டைத் தலைப்பட்டான், வீரபானத்தைக் காமுறுவான்; அவனுடைய வளைகழிக்கப்பட்ட உரிமை மகளிரைப்போலப் பழைய அழகு தொலைந்து பாடுவாரது சுற்றமும் ஒளிமழுங்கின; தொகுதிகொண்ட முரசங்களும் கண்கிழிந்தன; பாகர்முதலாயின ஆளில்லாத மலைபோன்ற யானைகளும் மருப்பிழந்து விட்டன; இவ்வாறு வெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்துபாட்டை எய்துவிப்ப என் இறைவன்........அவ்விறந்து பாட்டிலே படுதலை அறியேனாய் ஐயோ! அளித்தலையுடையேன் வந்தேன்; நிச்சயமாக என்ன துயரமுறுவர்கொல்லோ என்னையடைந்த சுற்றத்தார்? மழையையுடைய இரவின்கண் மரக்கலம் கவிழ்ந்தகாலத்துப் பொறுத்தற்கரிய துன்பமுற்ற நெஞ்சுடனே ஒருபெற்றிப்படக் கண்ணில்லாத ஊமன் கடலின்கண் அழுந்தினாற்போல எல்லையளந்தறியப்படாத திரையரிதாகிய வெள்ளத்தின்கண் துன்பமாகிய மறுசுழியின்கட் பட்டுச் சுழலுமதனின் இறந்துபடுதலே நன்று; நமக்குத் தக்க செய்கையும் அதுவே-எ - று. யான் அதுசெய்யப்பெற்றிலேனென்னும் நினைவிற்று. மன் கழிவின்கண் வந்தது. வெருவா வழங்குமென இயையும். 'முரசும் கண்கிழிந்தன, யானையும் மருப்பிழந்தன' என்ற கருத்து: அவற்றால் தொழில் கொள்வாரின்மையின், அவை பயனிழந்தனவென்பதாம். (239)
தொடியுடைய தோண்மணந்தனன்
கடிகாவிற் பூச்சூடினன்
தண்கமழுஞ் சாந்துநீவினன்
செற்றோரை வழிதபுத்தனன்
நட்டோரை யுயர்புகூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூறலன்
பிறரைத்தா னிரப்பறியலன்
இரந்தோர்க்கு மறுப்பறியலன்
வேந்துடையவையத் தோங்குபுகழ் தோற்றினன்
வருபடை யெதிர்தாங்கினன்
பெயர்படை புறங்கண்டனன
கடும்பரிய மாக்கடவினன்
நெடுந்தெருவிற் றேர்வழங்கினன்
ஓங்கியலகளிறூர்ந் தனன்
தீஞ்செறி தசும்புதொலைச்சினன்
பாணுவப்பப் பசிதீர்த்தனன்
மயக்குடைய மொழிவிடுத்தனன், ஆங்குச்
செய்ப வெல்லாஞ்
|