புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   510
Zoom In NormalZoom Out

களும்     யானைகளும்  தேர்களும்  அழியாத புதுவருவாயையுடைய
நாடும்   ஊர்களும்   பாடுவார்க்குக்குறையறக்கொடு  க்கும்  ஆயாகிய
அண்டிரன்       கோடேந்திய      அல்குலினையும்       குறிய
கைவளைகளையுமுடைய     உரிமை     மகளிரோடு    காலனென்று
சொல்லப்படாநின்ற   கண்ணோட்ட   மில்லாதவன்   கொண்டுபோகத்
தேவருலகத்தை   யடைந்தானாகக்   கொண்டு,   பொந்தாகிய   தான்
வாழுமிடத்துப்   போழ்ந்தாற்போலும்   வாயலகையுடைய   பேராந்தை
சுட்டுக்குவியென்று  செத்தோரை  அழைப்பதுபோலக் கூவும் கள்ளியை
யுடைய பாழிடமாகியபுறங்காட்டுள்   ஒருபுடையிலே  தங்கி  ஒள்ளிய
தீச்சுட      உடம்பு       மாய்ந்துவிட்டது;       பொலிவழிந்த
கண்ணினையுடையராய்த்    தம்மைப்    பாதுகாப்போரைக் காணாது
ஆரவாரிக்குங்    கிளையுடனே   செயலற்று   அறிவுடையோர்  தம்
மெய்யுணங்கிய    பசியையுடையராய்ப்    பிறருடைய   நாட்டின்கண்
தலைப்படும்  போக்கையுடையராயினார்  இப்பொழுது;இஃதொருநிலை
இருந்தவாறு என்னை! - எ - று.

‘மேலோ  ருலக  மெய்தின  னெனவே’  எனவும்,  ‘ஒள்ளெரி  நைப்ப
வுடம்புமாய்ந் தனனென’ எனவும் பாடமோதுவாரும் உளர்.

(241) திண்டே ரிரவலர்க் கீத்த தண்டார்
அண்டிரன் வரூஉ மென்ன வொண்டொடி
வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுட்
போர்ப் புறு முரசங் கறங்க
ஆர்ப்பெழுந் தன்றால் விசும்பி னானே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

அவனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

(இ - ள்.)       திண்ணிய      தேரை    இரவலர்க்கு     ஈத்த
குளிர்ந்தமாலையையுடைய     ஆய்     வருகிறானென்று    ஒள்ளிய
தொடியினையும் வச்சிராயுதத்தையுமுடைய விசாலமாகிய கையையுடைய
இந்திரனது    கோயிலுள்ளே    போர்த்தலுற்ற    முரசம்    முழங்க
வானத்தின்கண் ஓசை தோன்றிற்று- எ - று.

இப்பெற்றிப்பட்ட   வள்ளியோனை   வானோர்  எதிர்கோடல்  தப்பா
தென்றவாறு.

இது தற்குறிப்பேற்றமென்பதோர்அணிப்பொருட்டாய் நின்றது.

(242) இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.

திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை)

ஒல்லையூர்   கிழான்மகன்பெருஞ்சாத்தனைக்  குடவாயிற்  கீரத்தனார்
பாடியது.

(இ - ள்.)  இளைய  வீரர் சூடார்;   வளையணிந்த   இளையமகளிர்
பறியார்;  நல்ல  யாழ்க்கோட்டின் மெல்லவளைத்துப் பாணன் பறித்துச்
சூடிக்கொள்ளான்;   பாடினி   சூடாள்;  தன்னுடைய  ஆண்மைப்பாடு
யாவர்க்கும்  வெளிப்பட  வீரரை  எதிர்நின்று கொன்று வென்ற வலிய
வேலையுடைய   சாத்தன்   இறந்துபட்டபின்பு   முல்லையாய   நீயும்
பூக்கக்கடவையோ, அவனது ஒல்லையூர் நாட்டின்கண்?- எ - று.

அவனையிழந்து   கொடியேனாய்   வாழ்கின்ற   யானேயன்றி   நீயும்
கொடியையாய்ப் பூக்கின்றாயோவென எச்சவும்மையாய் நின்றது;