குரற் றடாரியின் யாமை மிளிரப்
பனைநுகும் பன்ன சினைமுதிர் வராலொ
டுறழ்வே லன்ன வொண்கயன் முகக்கும்
அகனாட் டண்ணல் புகாவே நெருநைப்
பகலிடங் கண்ணிப் பலரொடுங் கூடி
ஒருவழிப் பட்டன்று மன்னே யின்றே
அடங்கிய கற்பி னாய்நுதன் மடந்தை
உயர்நிலை யுலக மவன்புக....... லரி
நீறாடு சுளகிற் சீறிட நீக்கி
அழுத லானாக் கண்ணள்
மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், ஆனந்தப்பையுள்) ............தும்பி சொகினனார் பாடியது. (இ - ள்.) கதிர்நுனைபோலும் மூக்கையுடைய ஆரன்மீன் சேற்றின் கீழே செருகத் திரண்ட (மிசையாகிய) கோட்டையுடைய வாளைமீன் நீர்மேல் பிறழ எரிபோலும் நிறத்த பூவையுடைய பொய்கைகளை நெருங்கி உடனே வலைஞரானவர், ஒலிநிரம்பாத ஓசையையுடைய கிணையினது முகமேபோலும் யாமை பிறழப் பனையினது நுகும்பையொத்த சினை முற்றிய வராலோடு மாறுபடும் வேல்போன்ற ஒள்ளிய கயலை முகந்து கொள்ளும் முன்னகன்ற நாட்டையுடைய குருசிலது உணவு நெருநலை நாளாற் பகுத்த இடத்தைக் கருதிப் பலருடனே இயைந்து ஒருவழிப்பட்டது; அது கழிந்தது; இன்று, தன்கண்ணேயடங்கிய கற்பினையும் சிறிய நுதலினையுமுடைய மடந்தை உயர்ந்த நிலைமையையுடைய விண்ணுலகத்தே அவன் சென்று புக அவனுக்கு உணவு கொடுத்தல் வேண்டிச் சுளகுபோலச்சிறிய இடத்தைத் துடைத்து அழுதலமையாத கண்ணையுடையளாய்த் தன்கண் கலுழ்கின்ற நீராலே சாணாகத்தைக் கொண்டு மெழுகுமளவிலே பட்டது-எ - று. மெழுகுமளவாயிற்றென்றது பொருளெனவுரைக்க. மன் கழிவின்கண் வந்தது. இது, கண்டார் நிலையாமை கூறி இரங்கியவாறு.
(250) குய்குரன் மலிந்த கொழுந்துவை யடிசில்
இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லி யுணவின் மனைவியோ டினியே
புல்லென் றனையால் வளங்கெழு திருநகர்
வான்சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
முனித்தலைப் புதல்வர் தந்தை
தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், தாபதநிலை) ...............தாயங்கண்ணியார் பாடியது. (இ - ள்.) தாளிப்போசை மிக்க கொழுவிய துவையோடுகூடிய அடிசில் இரவலரைத் தன்கண்ணே தகைத்த வாயிலினையும் தன்னாற் புரக்கப்படுவோர் கண்ணீரை மாற்றிய குளிர்ந்த நறியபந்தரினையு முடைய மனையிடத்து மயிரைக் குறைத்துக் குறியவளையைக்களைந்து அல்லியரிசியாகிய உணவையுடைய மனையாளுடனே இப்பொழுது பொலிவழிந்தாய், செல்வம்பொருந்திய அழகாகிய நகரே!
|