புறநானூறு
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   513
Zoom In NormalZoom Out

முதுபாலையாவது:-

‘’காம்புயர் கடத்திடைக் கணவனை யிழந்த
பூங்கொடி யரிவை புலம்புரைத் தன்று’’      (பு. வெ. 254)
 

(இ - ள்.)   நின்னைப்  பிரிந்து  ஆற்றேனாகின்றேன்;  என்னுடைய
திறத்து   வருத்தங்கொள்ளாதொழிவாயாக,   இப்பொழுது; சுற்றப்பட்ட
கண்ணியை யுடைய நின்னோடு கூடி விளையாடப் போந்த இளையோர்
விளையாடா  நிற்ப  அவரோடு  நகுகின்றிலேனென்று  கருதவந்த நின்
இறந்து   பாட்டை   நெல்  எழாத  பசியமூங்கில்  பட்டையொழித்தாற்
போன்ற  வெளுத்திருந்த  வளையில்லாத வறிய கையைத் தலைமேலே
ஏற்றிக்கொண்டு நின் சுற்றத்திடத்தே செலுத்தச் செல்வேனோ இன்னும்,
இறந்துபடினல்லது? நின்வார்த்தையை எனக்கு சொல்லுவாயாக- எ - று.

அவலமென்றது, பிரிந்தவழிஆற்றேனென்று வருந்தும் அவலத்தை.

கூறும்  நின்னுரையென  அவன்சொற்கேட்டல்  விருப்பினாற் கூறுவாள்
போன்று மயங்கிக் கூறியவாறு.

(254) இளையரு முதியரும் வேறுபுலம் படர
எடுப்ப வெழாஅய் மார்பமண் புல்ல
இடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த
வளையில் வறுங்கை யோச்சிக் கிளையுள்
இன்ன னாயின னிளையோ னென்று
நின்னுரை செல்லு மாயின் மற்று
முன்னூர்ப் பழுனிய கோளி யாலத்துப்
புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன்
வளனுஞ் செம்மலு மெமக்கென நாளும்
ஆனாது புகழு மன்னை
யாங்கா குவள்கொ லளிய டானே.
 

திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுபாலை)

..........கயமனார் பாடியது.

(இ - ள்.)  இளையோரும்  முதியோரும் வேற்றுநிலத்தே  விலங்கிப்
போக  யான்  எடுப்பவும் நீ எழுந்திராயாய் நினது மார்பம் நிலத்தைப்
பொருந்தச்   சுரத்திடை  மேம்பட  வீழ்ந்த  இளையோய்!  வெளுத்த
வளையில்லாத  வறிய கையைத் தலைமேலே வைத்துச் சுற்றத்தின்கண்
இத்தன்மையனாயினான்    இளையனென்று   யான்   சொல்ல   நின்
இறந்துபாடு  கூடிய  வார்த்தை  செல்லுமாயின், ஊர்முன்னர்ப் பழுத்த
கோளியாகிய      ஆலமரத்தின்கட்      புள்ளுக்கள்     மிகும்
புதுவருவாயையுடைய அத்தன்மைத்து, என்னுடைய மகனது செல்வமும்
தலைமையும் எமக்கென்று நாடோறும் அமையாது புகழும் நின்னுடைய
மாதா எவ்வாறு ஆவாள் கொல்?அவள் இரங்கத்தக்கவள் தான்! -எ-று.

வளனும்   செம்மலும்  புள்ளார்  யாணர்த்தற்றென்றது, புள்ளெல்லாஞ்
சென்று  அணுக  ஆலமரம்  பயன்பட்டு  நின்றாற்போல இவனும் தன்
சுற்றத்தாரும்   பிறரும்   நட்டாரும்  நுகரும்படி  நின்றமை  தோன்ற
நின்றது.

‘நின்னுரைசெல்லுமாயின்    யாங்காகுவள்கொல்’ என்ற கருத்து: யான்
இறந்துபட்டவாறு  சொல்லின்  அன்றே  அவள் வருத்தமுறுவள்; அது
யான் மாட்டேனென்பதாம்.

முன்னூர்: முன்மொழிநிலையல். மற்று:அசைநிலை.

(255) ஐயோ வெனின்யான் புலியஞ் சுவலே
அணைத்தனன் கொளினே யகன்மார் பெடுக்க வல்லேன்
என்போற் பெருவிதிர்ப் புறுக நின்னை