இன்னா துற்ற வறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழற் சேர்க நடத்திசிற் சிறிதே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுபாலை) ............ வன்பரணர் பாடியது. (இ - ள்.) ஐயோவென்று அரற்றுவேனாயின் அவ்வுரைவழியே வந்து நின் உடம்பாயினும் யான் காணப்பெறாமல் ஏதஞ்செய்யுமோவென்று புலியை அஞ்சுவேன்; இவ்விடத்தினின்றும் எடுத்துக்கொண்டுபோவேனென்று நினைப்பின் நினது அகலிய மார்பை எடுக்கமாட்டேன்; என்னையொப்பப் பெரிய நடுக்கத்தை உறுவதாக, உன்னை இறந்துபடும்பரிசு வந்து தாக்கிய அறமில்லாத கூற்றே. யாம் மலையினது நிழற்கண்ணே அடைவேமாக; எனது நிரைத்த வளையையுடைய முன்கையைப் பிடித்து மெல்ல நடப்பாயாக-எ-று. நடவாயென்னும் முன்னிலைவினைச்சொல் சின்னென்னும் இடைச் சொல்லான் அசைக்கப்பட்டு நின்றது. (256)
கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடைச் சாகாட் டாரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த வெமக்கு மருளி
வியன்மல ரகன்பொழி லீமத் தாழி
அகலி தாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், முதுபாலை) ................................ (இ - ள்.) கலம் வனையும் வேட்கோவே! கலம் வனையும் வேட்கோவே! சகடஞ் செலுத்தும் உருளின்கண் ஆரத்தைப் பொருந்திவந்த சிறிய வெளிய பல்லிபோல் நெருநலை நாளாற் பலசுரமும் தன்னோடு கழிந்துவந்த எமக்கும் அருள்பண்ணி (யாமும் அவனோடே கூடியிருக்கும் படி) பெரிய பரப்பினையுடைய அகலிய பூமியிடத்துக் காட்டின்கண் முதுமக்கட்டாழியை இடமுடைத்தாக வனைவாயாக,பெரிய இடத்தினையுடைய பழைய ஊரின்கட் கலம் வனையும் வேட்கோவே!- எ - று. ‘எமக்கும்’ என்றது பன்மையும் தலைமையும் கருதாது மயங்கக் கூறி நின்றது. ‘கோவே! கோவே! மூதூர்க்கலஞ்செய்கோவே! எமக்கும் அருளி அகலிதாக வனைகவெனக்கூட்டுக. அடுக்கு, விரைவின்கண் வந்தது. (257)
செருப்பிடைச் சிறுபர லன்னன் கணைக்கால்
அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட்
குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லொ
டியார்கொலோ வளியன் றானே தேரின்
ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக்
காடுகைக் கொண்டன்று மிலனே காலைப்
புல்லா ரினநிரை செல்புற நோக்கிக்
கையிற் சுட்டிப் பையென வெண்ணிச்
சிலையின் மாற்றி யோனே யவைதாம்
மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும்
வெண்கோ டோன்றாக் குழிசியொடு
நாளுறை மத்தொலி கேளா தோனே. திணை - வெட்சி; துறை - உண்டாட்டு. ---------------- உண்டாட்டாவது:- ‘’தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று’’
(பு. வெ. 15) (இ - ள்.) . . . . . . . . . திரண்ட காலையும் அழகிய வயிற்றினையும் பரந்த மார்பினையும் பசிய கண்ணினையும் குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம் பொருந்திய மயிரினையுடைய தாடியினையும் செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பினையுமுடையனாய் வில்லுடனே யார்தான் இவ்வளிக்கத் தக்கான்றான்? ஆராயின், ஊரைப்பெரிதும் நீங்கினதும் இலன் தனக்கு அரணெனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும் இலன்; இற்றைநாட் காலையே பொருந்தாதாரது இனமாகிய |