மது இருந்த சாடியை வாய்திறப்பவும் ஆட்டுக்கிடாயை வீழ்ப்பவும் அடப்பட்டு அமைந்தொழியாத கொழுவிய துவையையும் ஊனையுடைய சோற்றையும் விரும்பிய பரிசே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து எம்மோடு நட்புச்செய்தாய் முன்பு; இப்பொழுது, பாரி இறந்தானாகக் கலங்கிச் செயலற்று நீர்வார்கண்ணையுடையேமாய்த் தொழுது நின்னை வாழ்த்திச் செல்லுதும், பெரிய புகழையுடைய பறம்பே! கோற்றொழிலாகச் செய்யப்பட்ட திரண்ட குறிய வளையையணிந்த முன்கையினையுடைய மகளிரது மணம் கமழும் கரிய கூந்தலைத் தீண்டுதற்கு உரியவரை நினைந்து- எ - று. பறம்பே! பெருவளம் பழுனி நட்டனை முன்; இனி நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்து சேறுமெனக் கூட்டுக. மன் : கழிவின்கண் வந்தது. வாழியும் ஓவும் : அசைநிலை. ஆனாக்கொழுந்துவையென்பதற்கு விருப்பம் அமையாத கொழுந் துவையெனினும் அமையும். (114)
ஈண்டுநின் றோர்க்குந் தோன்றுஞ் சிறுவரை
சென்றுநின் றோர்க்குந் தோன்று மன்ற
களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றிற்
றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவன்மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது. (இ - ள்.) இவ்விடத்து நின்றோர்க்குந் தோன்றும், சிறிது எல்லை போய் நின்றோர்க்குந் தோன்றும், நிச்சயமாக; யானை மென்று போகடப்பட்ட கவளத்தினது கோதுபோல மதுப்பிழிந்து போகடப்பட்ட கோதுடைத்தாகிய சிதறியவற்றினின்றும் வார்ந்த மதுச்சேறு ஒழுகும் முற்றத்தையுடைய தேர்வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோனுடைய மலை-எ - று. நெடியோன் குன்று தோன்றுமென்றது புகழான் உயர்ந்து காணா தார்க்கும் செவிப்புலனாகத் தோன்றும், அவன் உளனாயகாலத்து; இப்பொழுது பிறமலைபோலக் கட்புலனாகத் தோன்றும் அளவாயிற்றெனக் கையற்றுக் கூறியவாறாகக் கொள்க. (115)
ஒருசா ரருவி யார்ப்ப வொருசார்
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்
வாக்க வுக்க தேக்கட் டேறல்
கல்லலைத் தொழுகு மன்னே பல்வேல்
அண்ணல் யானை வேந்தர்க்
கின்னா னாகிய வினியோன் குன்றே. திணையும் துறையும் அவை. (பொதுவியல், கையறுநிலை) அவனை அவர் பாடியது. (பாரிமகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது). (இ - ள்.) ஒருபக்கம் அருவி ஆர்த்தொழுக ஒருபக்கம் பாணருடைய மண்டைகள் நிரம்ப வாக்கவேண்டி வடிக்க உக்க இனிய கள்ளாகிய தேறல் கல்லையுருட்டி யொழுகும்,
|