(இ - ள்.)மதுவையும் அலைத்துண்ணும்படி பிழிமின்; ஆட்டுவிடை யையும் படுமின்; பசிய தழையாலே வேயப்பட்ட புல்லிய காலையுடைய பந்தரின்கண் நீர் கொழித்துக் கொடுவரப்பட்ட இளைய மணலை நிரம்பப் பரப்புமின்; பகைவரது தூசிப்படையை முறித்துப் பெயர்ந்துபோகிற தனது படைக்குப்பின்னே நின்று நிரையுடனே வருகின்ற என் இறைவனுக்குப் பக்கமறவராய் நிரைகொண்டுவருவோர் அவன் றன்னினும் பெரிய இளைப்பையுடையர்-எ - று. சாயல் - விடாயாலுண்டான மென்மை. என்னைக்கு உழையோர் தன்னினும் பெருஞ்சாயலர்; அவர்க்கு நறவும் தொடுமின்; விடையும் வீழ்மின்; பெய்ம்மினெனக்கூட்டுக. |