(இ - ள்.) ஆவும், ஆனினதியல்பையுடைய அந்தணரும், மகளிரும், நோயுடையீரும், பாதுகாத்துத் தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக்கிரியையைப் பண்ணும் பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும் எம்முடைய அம்பை விரையச் செலுத்தக்கடவேம், நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையுமென்று அறநெறியைச் சொல்லும் மேற்கோளினையும் அதற்கேற்ற மறத்தினையுமுடைய, கொல்யானைமேலே எடுக்கப்பட்ட கொடிகள் ஆகாயத்தை நிழற்செய்யும் எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக; தம்முடைய கோவாகிய, சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் கூத்தர்க்கு வழங்கிய முந்நீர்க் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடைய நெடியோனால் உளதாக்கப்பட்ட நல்ல நீரையுடைய பஃறுளியென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்-எ - று. |
முந்நீர்க்கண் வடிம்பலம்ப நின்றானென்ற வியப்பால், நெடியோ னென்றாரென்ப. யாற்றுநீரும் ஊற்றுநீரும் மழைநீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்று பெயராயிற்று; அன்றி, முன்னீரென்றோதி, நிலத்திற்கு முன்னாகிய |